
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்கம் என்று ஒரே மாதிரியான படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அவை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
கட்டுக்கட்டாக பணம் மற்றும் தங்க பிஸ்கட் இருக்கும் பல்வேறு புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “சற்று முன்பு நாம் தமிழர் சீமான் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம், தங்க கட்டிகள் உங்கள் பார்வைக்கு. உப்பு போட்டு சாப்பிடுற தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்க…” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை Aravind Ganesh என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஏப்ரல் 3ம் தேதி பதிவிட்டுள்ளார்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
இதே படங்களுடன் மற்றொரு பதிவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில், “#ஸ்டாலின்_மகள் வீட்டில் இதுவரை ₹700 கோடி ரொக்கம் மற்றும் 260 கிலோ தங்க கட்டிகள், ₹30000 கோடி மதிப்புள்ள வரி ஏய்ப்பு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை தஞ்சை ராஜசேகர் அம்பலம் என்பவர் 2021 ஏப்ரல் 2ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இந்த இரண்டு பதிவுகளையும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டு, பணம் எதுவும் கைப்பற்றவில்லை என்று ரசீது கொடுத்து சென்றனர். ஆனால், பல ஆயிரம் கோடி ரூபாய் சிக்கியதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டது. இப்படி பல படங்கள் வைரல் செய்யப்பட்டு வரும் சூழலில் அவற்றை அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டு வருகிறோம்.
இந்த நிலையில் ரெய்டே நடைபெறாத சீமான் வீட்டில் இருந்து கோடிக் கணக்கில் பணம், தங்கம் கைப்பற்றப்பட்டதாக ஒரு பதிவு பலராலும் ஷேர் செய்யப்படவே அது பற்றி ஆய்வு செய்தோம். பதிவாளர் எதற்காக இப்படி செய்தார், கிண்டலுக்காக செய்தாரா என எதுவும் தெரியவில்லை.
சீமான் வீட்டில் வருமான வரித்துறை அல்லது வேறு பிரிவினர் சோதனை நடத்தியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அப்படி வெளியாகி இருந்தால் அது பரபரப்பாக பேசப்பட்டிருக்கும். எந்த ஒரு செய்தியும் கிடைக்காத நிலையில் இது விஷமத்தனமானது என்பது உறுதியாகிறது.
ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறை கைப்பட எழுதி கொடுத்த ரசீது வெளியாகியுள்ளது. மேலும், செந்தாமரை வீட்டில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் தங்க பிஸ்கட்களின் படங்கள் தவறானவை என்று நாம் ஏற்கனவே ஆய்வு செய்த புகைப்படங்களும் கூட இதில் இருந்தன. இதனுடன் வேறு சில படங்களும் இருந்தன. எனவே, இது பற்றி தனியாக ஆய்வு செய்தோம்.
முதலில் ஒருவர் கால் மடடும் தெரியும் புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அது 2019ம் ஆண்டு கல்கி பகவான் ஆஸ்ரமத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் போது எடுக்கப்பட்டது என்று நியூஸ் 18ல் வெளியான செய்தி நமக்கு கிடைத்தது. அது தவிர 2019 அக்டோபரில் கல்கி பகவானுக்குச் சொந்தமான இடங்களில் ஆய்வு நடந்த போது வெளியான பல்வேறு செய்திகள், சமூக ஊடக பதிவுகளில் இந்த படம் கல்கி ஆசிரமத்தில் எடுக்கப்பட்டது என்றே குறிப்பிட்டிருந்தன.

அசல் பதிவைக் காண: news18.com I Archive
தங்க பிஸ்கட், 2000ம் ரூபாய் நோட்டு இருக்கும் புகைப்படம் எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்று அறிய அதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த படம் 2018ம் ஆண்டு வெளியாகி இருப்பது தெரிந்தது. 2018ம் ஆண்டு நெடுஞ்சாலை காண்ட்ராக்டர் ஒருவர் வீட்டில் சோதனையிட்ட போது சிக்கிய பணம் என்று வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.
ஜன்னல் அருகே ரூபாய் நோட்டு கட்டுக்கள் இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த புகைப்படம் 2019ம் ஆண்டு வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் பிடிபட்ட பணம் என்பது தெரியவந்தது.
சுவற்றை ஒட்டி 2000ம் ரூபாய் நோட்டுக் கட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அந்த படம் 2019ம் ஆண்டு டெல்லியில் நடந்த ஒரு வருமான வரித்துறை சோதனையின் போது எடுக்கப்பட்ட படம் என்று செய்திகள் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: news24online.com I Archive
நம்முடைய ஆய்வில், சீமான் வீட்டில் எந்த ஒரு ஆய்வும் நடத்தியதாக செய்தி கிடைக்கவில்லை. ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. ஆனால் அங்கிருந்து எதையும் கைப்பற்றவில்லை என்று வருமான வரித்துறை அளித்த ரசீதும் கிடைத்துள்ளது. இதன் மூலம் ஸ்டாலின் மகள் வீட்டில் இருந்து பணம் கைப்பற்றப்பட்டதாக பரவும் செய்தி தவறானது என்பது உறுதியாகிறது.
அடுத்தது பதிவில் உள்ள புகைப்படங்கள் எல்லாம் டெல்லி, மதுரை, வேலூர், கல்கி பகவான் ஆசிரமத்தில் என்று பல்வேறு இடங்களில் பல்வேறு சமயங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ஆய்வின் போது கைப்பற்றப்பட்டவை என்பதும் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. சீமான் மற்றும் ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தின் படம் என்று கூறுவது தவறானது என்று உறுதியாகிறது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறானவை என்பது உறுதி செய்யப்படுகிறன.
முடிவு:
சீமான் மற்றும் ஸ்டாலின் மகள் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பகிரப்படும் படங்கள் பல ஆண்டுகளாக பல்வேறு இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைகளின் போது எடுக்கப்பட்டவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:சீமான் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணம் என்று பரவும் பழைய புகைப்படங்கள்!
Fact Check By: Chendur PandianResult: False
