பெண்களுக்காக யோகி விட்டுள்ள பஸ் என்று பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பியதாக பரவும் பதிவு உண்மையா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்காக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகம் செய்துள்ள பஸ் என்று ஒரு படத்தை பா.ஜ.க-வினர் பரப்பி வருவதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archive

மேற்கு வங்க வாகனப் பதிவு கொண்ட, மேற்கு வங்க போக்குவரத்துக் கழகம் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்ட பேருந்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில் “உத்திரபிரதேசத்தின் மகளிர் பேருந்து.யோகிடா.🔥🔥” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கு.அண்ணாமலை ஆர்மி என்ற ட்விட்டர் பக்கம் இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இரத்தினவேலு வசந்தா. என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் உள்பட பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

https://twitter.com/KarthikGnath420/status/1634109666174337024

Archive

ஃபேஸ்புக்கிலும் இந்த ஸ்கிரீன்ஷாட் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. பா.ஜ.க-வினர் இந்த பதிவை வெளியிட்டுள்ளனர் என்று குறிப்பிட்டு பலரும் இதைப் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உண்மை அறிவோம்:

உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கான யோகி ஆதித்யநாத் அரசு அறிமுகம் செய்துள்ள பிரத்தியேக பஸ்ஸை என்று ஒரு படத்தை பா.ஜ.க-வினர் பரப்பி வருகின்றனர் என்று குறிப்பிட்டு பா.ஜ.க-விரை திட்டித் தீர்த்து சிலர் பதிவிட்டு வருகின்றனர். பேருந்தின் ரிஜிஸ்டிரேஷன் நம்பர் மேற்கு வங்கம் என்று உள்ளது. பஸ்ஸில் WBTC (West Bengal Transport Corporation) அதாவது மேற்கு வங்க போக்குவரத்துக் கழகம் என்று தெளிவாக உள்ளது. மேற்கு வங்க போக்குவரத்து கழக இணையதளத்திற்குச் சென்று பார்த்த போது, பஸ் சேவை பிரிவில் இதே போன்று பஸ் படத்தை அவர்கள் வெளியிட்டிருந்தனர். இரண்டு பஸ்ஸின் தோற்றமும் ஒன்றாக உள்ளது. 

பா.ஜ.க-வினர் வேண்டுமென்றே வதந்தி பரப்புவது போல பலரும் இந்த ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்து வருகின்றனர். உண்மையில், கு.அண்ணாமலை ஆர்மி (@KarthikGnath420) என்பது பா.ஜ.க ஆதரவு ட்விட்டர் பக்கம் இல்லை. பா.ஜ.க-வை விமர்சிக்கும், கலாய்க்கும், நையாண்டி செய்யும் ட்விட்டர் பக்கம் ஆகும். பா.ஜ.க-வினர் கூறுவது போன்று தொடர்ந்து பல விஷம தகவல்களை இந்த ட்விட்டர் பக்கம் வெளியிட்டுள்ளது. வைரலான சில பதிவுகள் பற்றி நாம் ஏற்கனவே ஃபேக்ட் செக் கட்டுரை வெளியிட்டுள்ளோம். சமீபத்தில் கூட உத்தரப்பிரதேச லோக்கல் ரயில் என்று ஒரு வதந்தி பரப்பப்பட்டது. அந்த கட்டுரையைக் காண இங்கே கிளிக் செய்யுங்கள்.

“தேசியவாதி, சிறப்பு வார் ரூம், படுத்தாவது திராவிடத்தை வீழ்த்துவோம்..” என்று அதன் சுய விவர குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் இது பா.ஜ.க-வை கிண்டல் செய்கிறது என்பதை தெளிவுபடுத்துகின்றன. அந்த ட்விட் பக்கத்தில் வெளியான ட்வீட்களை பார்க்கும் போது, எல்லாமே பா.ஜ.க-வை நையாண்டி செய்யும் வகையில் இருப்பதை காண முடிகிறது. பா.ஜ.க-வுக்கு எதிரான கட்சியைச் சார்ந்த யாரோ ஒருவர் இந்த பக்கத்தை இயக்கி வருவதை அதன் பதிவுகள் தெளிவுபடுத்துகின்றன. உண்மை இப்படி இருக்க, பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தவறான தகவலை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். 

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

பா.ஜ.க-வை நையாண்டி செய்யும் நோக்கில் பதிவிடப்பட்ட படத்தை எடுத்து, பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்று தவறான தகவலை பலரும் பகிர்ந்து வருவதை நம்முடைய ஆய்வு உறுதி செய்துள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பாஜக-வை தொடர்ந்து நையாண்டி செய்து வரும் ட்விட்டர் பக்கம் ஒன்று உ.பி-யில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பஸ் என்று வெளியிட்ட பதிவை பா.ஜ.க-வினர் வெளியிட்டது என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பெண்களுக்காக யோகி விட்டுள்ள பஸ் என்று பா.ஜ.க-வினர் வதந்தி பரப்பியதாக பரவும் பதிவு உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False