அலஸ்காவை திகிலுக்குள்ளாக்கிய நிலநடுக்க வீடியோவை பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டிருந்தது. ஆனால் அது எப்போது எடுக்கப்பட்டது என்பதை அது குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்தியது.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive 1 I Archive 2

நிலநடுக்கத்தால் வீடு அதிரும் காட்சி மற்றும் வாகனங்கள் வரிசையாக நிற்கும் காட்சிகள் அடங்கிய வீடியோவை பாலிமர் தொலைக்காட்சி கடந்த ஜூலை 29, 2021 அன்று வெளியிட்டுள்ளது. நிலைத் தகவலில், "அலஸ்காவை திகிலுக்குள்ளாக்கிய நிலநடுக்க வீடியோ" என்று குறிப்பிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அலாஸ்காவில் கடந்த ஜூலை 28ம் மிகக் கடுமையான பூகம்பம் ஏற்பட்டது. 8.2 என்ற அளவில் நிலநடுக்கத்தின் சக்தி பதிவாகி இருந்தது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாலிமர் தொலைக்காட்சியில் அலாஸ்கா பூகம்பம் வீடியோவை வெளியிட்டிருந்தனர். மூன்று வெவ்வேறு நிகழ்வுகளை தொகுத்து ஒரே வீடியோவாக வெளியிட்டிருந்தனர்.

முதலில் வீட்டுக்குள் பதிவான நிலநடுக்கத்தின் காட்சி இடம் பெற்றிருந்தது. நிலநடுக்கம் ஏற்பட்ட போது வீட்டுக்குள் இருந்த தன் குழந்தையை தூக்கிக்கொண்டு பெண் ஒருவர் தூக்கிக்கொண்டு வெளியே ஓடுகிறார். அதன் பிறகு சாலையில் அணி வகுத்து நிற்கும் வாகனங்கள் மற்றும் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தது.

2021 ஜூலை 28ம் தேதி அலாஸ்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டதாக இருக்கும் என்று எண்ணத்தில் பலரும் இந்த வீடியோவை ஷேர் செய்து வந்துள்ளனர். இது இப்போது எடுக்கப்பட்டதுதானா என்று தேடினோம். வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, வீட்டுக்குள் எடுக்கப்பட்ட நிலநடுக்க காட்சி 2018ம் ஆண்டு ட்விட்டர், யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

ட்விட்டரில் இந்த வீடியோவை James Easton என்பவர் 2018 டிசம்பர் 1ம் தேதி பதிவிட்டிருந்தார். இந்த வீடியோவை அலாஸ்காவை சார்ந்த சில தொலைக்காட்சி ஊடகங்கள் பயன்படுத்திக்கொள்ள இவரிடம் அனுமதி கேட்டிருந்தன. இந்த வீடியோ உங்களுடையதா, இதை பயன்படுத்திக்கொள்ளலாமா என்று கேட்டதற்கு, இவர் ஆம், தாராளமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று பதில் பகுதியில் கூறியிருப்பதை காண முடிந்தது. இதன் மூலம் இந்த வீடியோ அலாஸ்காவில் எடுக்கப்பட்டது என்பதும் 2018ம் ஆண்டில் பதிவான காட்சி என்பதும் உறுதியானது.

Archive

மற்ற இரண்டு காட்சிகளை தி சன் என்ற இங்கிலாந்தைச் சார்ந்த ஊடகம் வெளியிட்டிருந்தது. அலாஸ்காவில் கடந்த ஜூலை 28ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர்.

பாலிமர் தொலைக்காட்சி அலாஸ்காவில் ஏற்பட்ட நிலநடுக்க காட்சி என்று குறிப்பிட்டுள்ளது. ஜூலை 28, 2021 அன்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ஜூலை 29ம் தேதி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

வீட்டுக்குள் இருந்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே செல்லும் தாய் ஒருவரின் வீடியோ 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற இரண்டு வீடியோ காட்சிகளும் 2021 ஜூலை 28 நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பழைய வீடியோ காட்சியை புதிதுபோல பாலிமர் தொலைக்காட்சி வெளியிட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு:

நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:பாலிமர் வெளியிட்ட அலாஸ்கா நிலநடுக்கம் வீடியோ... எப்போது எடுக்கப்பட்டது தெரியுமா?

Fact Check By: Chendur Pandian

Result: Partly False