
பீகாரில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அதிக அளவில் மக்கள் கூட்டம் கூடியதால் அதை ஊடகங்கள் காட்டாமல் மறைத்துவிட்டன என்று கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சாலையில் லட்சக்கணக்கானோர் திரண்டிருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், “Jannayak Rahul Gandi” என்று எழுதப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “ராகுல் காந்தி வரலாற்றை எழுதியுள்ளார். ராகுல் காந்தி அனைத்து சாதனைகளையும் முறியடித்துவிட்டார் என்று கோடி மீடீயா ஒருபோதும் சொல்ல மாட்டார்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து பல லட்சம் பேர் நீக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணி நடத்தி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தியின் பேரணியில் கலந்துகொண்ட மக்கள் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் ஆம்புலன்ஸ் ஒன்று செல்வதை காட்டுகின்றனர். எங்கேயும் காங்கிரஸ் கட்சியின் கொடியை காணவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்டத்தின் போது லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட்டது தொடர்பான செய்தி வைரல் ஆகியிருந்தது. பார்க்க பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்ட வீடியோ போல் தெரிந்தது. எனவே, இந்த வீடியோ சந்தேகத்தை ஏற்படுத்தவே இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை 2025 ஜூன் மாதத்தில் இருந்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளதை காண முடிந்தது. அவற்றில் பூரி ஜெகன்னாதர் கோவில் என்று குறிப்பிட்டு அவர்கள் பதிவிட்டிருந்தனர். ராகுல் காந்தி பீகாரில் மேற்கொண்டு வரும் பேரணி ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. ஆனால், வீடியோவோ ஜூன் மாதமே வெளியாகி உள்ளது. இதன் மூலம் இது ராகுல் காந்தியின் பேரணியின் வீடியோ இல்லை என்பது உறுதியானது.
உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
இந்த வீடியோ பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று பலரும் பதிவிட்டிருந்தனர். இதை உறுதி செய்துகொள்ள கூகுள் ஸ்ட்ரீட் வியூ கிடைக்கிறதா என்று பார்த்தோம். கோவிலுக்கு செல்லும் பாதையில் கூகுள் ஸ்ட்ரீட் வியூ இல்லை. ஆனால், கூகுள் மேப்பில் மேலிருந்து பார்க்கும் போது அந்த சாலையின் முடிவில் கோவில் இருப்பதை காண முடிகிறது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவிலும் சாலையின் முடிவில் வெள்ளை கோபுரங்களுடன் ஜெகன்னாதர் கோவில் இருப்பதை காண முடிகிறது. இவை எல்லாம் இந்த வீடியோ ஒடிசாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் ஆலயத்திற்கு செல்லும் வழியில் எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்கின்றன.
இந்த ஆண்டு ரத யாத்திரை ஜூன் 27ம் தேதி நடந்தது. அதற்கு முன்பாகவே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி இருப்பதன் மூலம் இது பழைய வீடியோவாக இருக்கலாம். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. இந்த வீடியோ ராகுல் காந்தி பேரணியின் வீடியோவா இல்லையா என்று மட்டுமே ஆய்வு செய்தோம். நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முடிவு:
பூரி ஜெகன்னாதர் கோவில் தேரோட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை ராகுல் காந்தியின் யாத்திரை என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:ஊடகங்கள் மறைத்த ராகுல் காந்தியின் பேரணி என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
