
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதான பாலியல் புகார் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தத் திட்டம் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படத்துடன் புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “ஸ்டாலின் மீது பாலியல் புகார். 1970-களில் பல்வேறு பெண்களிடம் லீலைகளில் ஈடுபட்டது குறித்து விக்கிலீக்ஸ் என்ற செய்தி நிறுவனம் ஒரு குற்றச்சாட்டை மன் வைத்தது அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்! தற்போது மத்திய புலனாய்வு அமைப்பு இது குறித்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நியூஸ் கார்டை SBala Bala @SBalaBala6 என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 செப்டம்பர் 20ம் தேதி வெளியிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இதை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மு.க.ஸ்டாலின் மீது விக்கிலீக்ஸ் குற்றச்சாட்டை முன்வைத்தது என்றும் அதை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நியூஸ் கார்டு டிசைன் மற்றும் தமிழ் ஃபாண்ட் வழக்கமான புதிய தலைமுறை நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.
மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இப்படி ஏதேனும் அறிவிப்பு செய்துள்ளதா என்று தேடிப் பார்த்தோம். ஆனால், அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. புதிய தலைமுறை இப்படி நியூஸ் கார்டு எதையும் வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் கிடைக்கவில்லை.
எனவே, புதிய தலைமுறை நிர்வாகி பரிசல் கிருஷ்ணாவைத் தொடர்புகொண்டு கேட்டோம். இது போலியானது என்று குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக இணையதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டு அதன் இணைப்பை நமக்குக் கொடுத்தார்.

அதில் இந்த செய்தியை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று குறிப்பிட்டு, ஃபேக் முத்திரையுடன் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்திருந்தனர். இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று உறுதியானது.
முடிவு:
மு.க.ஸ்டாலின் மீதான பாலியல் புகார் தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தத் திட்டம் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…Facebook I Twitter I Google News Channel

Title:மு.க.ஸ்டாலின் மீது பாலியல் புகார் என்று பரவும் போலி நியூஸ் கார்டு!
Written By: Chendur PandianResult: False
