கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் இஸ்லாமியர்கள் போல ஆடை அணிந்து இஸ்லாமியர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் சிவக்குமார் ஆகியோர் இப்தார் நோம்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது போன்ற வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "The CM and Deputy CM of Karnataka are celebrating by wearing new uniforms ...you cannot recognize them …god save Karnataka 🔥🔥

குல்லா போடுவதில் தமிழக அரசியல் வியாதிகள் திராவிடியன்ஸ் கூட்டணியினரை மிஞ்சிய கர்நாடக திப்புவின் வாரிசுகள்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Srinandhakumar Srinivasalu என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஜூன் 7ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

வீடியோவைப் பார்த்தாலே அது ரம்சான் நோம்பு திறப்பு நிகழ்ச்சி என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆண்டு (2023) ரம்சான், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே முடிந்துவிட்டது. மே மாதம் தான் சித்தராமையா முதலமைச்சராக பொறுப்பேற்றார். அப்படியிருக்க இந்த வீடியோ சித்தராமையாக கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு எடுக்கப்பட்டதாக இருக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்த வீடியோவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

இந்த வீடியோவை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2022ம் ஆண்டு இந்த வீடியோவை ஒன் இந்தியா கன்னட ஊடகம் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதில் இப்தார் விழாவில் சித்தராமையா மற்றும் டி.சிவக்குமார் பங்கேற்ற காட்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் கர்நாடக முதல்வரும், துணை முதல்வரும் இஸ்லாமிய உடை அணிந்து இஸ்லாமியர்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதியானது.

உண்மைப் பதிவைக் காண: YouTube

இஸ்லாமியர்கள் போல ஆடை அணிவது எந்த வகையில் தவறானது என்று தெரியவில்லை. பதிவிட்டவர் வெறுப்பைத் தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளது தெளிவாகிறது. அதே நேரத்தில் சித்தராமையா கர்நாடக முதல்வராவதற்கு ஓராண்டுக்கு முன்பு அதாவது 2022ம் ஆண்டில் நடந்த இப்ரார் விருந்து விழாவை இப்போது ஏதோ கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்டது போன்று தவறான தகவல் சேர்த்து பதிவிட்டுள்ளார். இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கர்நாடக முதல்வர், துணை முதல்வர் இஸ்லாமிய உடை அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் என்று பரவும் வீடியோ, ஓராண்டுக்கு முன்பு அதாவது அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பு எடுக்கப்பட்டது என்றும், அது இப்தார் விருந்தின் போது எடுக்கப்பட்டது என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கர்நாடக முதல்வரான பின் இஸ்லாமிய உடையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டாரா சித்தராமையா?

Written By: Chendur Pandian

Result: False