குஜராத் கலவரத்தில் பங்கேற்றவர் என்று கூறப்படும் அசோக் மோச்சியை பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

குஜராத் கலவரத்தின் பிரபல புகைப்படத்தை, தற்போது விவசாயிகள் போராட்ட காட்சி ஒன்றுடன் இணைத்து புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "அன்று - பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில்! - அசோக் மோச்சி. இன்று விவசாயிகள் போராட்டத்தில். மாற்றம் ஒன்றே மாறாதது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படத்தை Theekkathir என்ற ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கம் 2020 டிசம்பர் 15ம் தேதி பகிர்ந்துள்ளது.

Theekkathir மட்டுமல்லாது பலரும் இந்த புகைப்படத்தை தங்கள் ஃபேஸ்புக் பக்கங்களில் ஷேர் செய்து வருவதைக் காண முடிகிறது.

உண்மை அறிவோம்:

பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்ற நபர் தற்போது மனம் திருந்தி விவசாயிகள் நலனுக்காக நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கிறார் என்ற வகையில் பதிவிடப்பட்டுள்ளது. உண்மையில் கையில் ஆயுதத்துடன், தலையில் காவி ரிப்பன் கட்டிக்கொண்டு இருக்கும் நபர் புகைப்படம் 2002ல் குஜராத்தில் நடந்த வன்முறையின்போது எடுக்கப்பட்டதாகும். இதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.

பாபர் மசூதி இடிப்பு என்பது 1992 டிசம்பர் 6ம் தேதி நடந்தது. குஜராத் வன்முறை 2002ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடந்தது. அதாவது பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்துத்தான் குஜராத் வன்முறை நிகழ்ந்தது.

அசல் பதிவைக் காண: thehindu.com I Archive

அசோக் மோச்சி தான் கலவரத்தில் ஈடுபடவில்லை என்றும், புகைப்பட நிபுணர் தன்னை அப்படி போஸ் கொடுக்கச் சொன்னதாகவும், இந்த புகைப்படம் தன் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் அவர் பின்னர் பேட்டி அளித்திருந்தார். அவர் வன்முறையில் பங்கேற்று அதன் பிறகு மனம் திருந்தினாரா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை.

இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்று மட்டுமே ஆய்வு செய்தோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச முன்னணி ஊடகங்கள் கூட குஜராத் வன்முறை பற்றிய கட்டுரைகளில் இந்த புகைப்படத்தை பயன்படுத்தியிருப்பதைக் காண முடிந்தது. வால்ஸ்ட்ரீட் ஜேர்னல் இதழில் இந்த புகைப்படம் கெட்டி இமேஜஸ் தளத்திலிருந்து பெற்றதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அசல் பதிவைக் காண: wsj.com I Archive

இதன் அடிப்படையில் பிரபல புகைப்படங்கள் விற்பனை தளமான கெட்டி இமேஜஸ் தளத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தைத் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2002 குஜராத் வன்முறையின் போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு கெட்டி இமேஜஸ் இதை விற்பனைக்கு வைத்திருந்தது. இதன் மூலம் அசோக் மோச்சியின் படம் பாபர் மசூதி இடிப்பின் போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: gettyimages.in I Archive

அடுத்ததாக தற்போது விவசாயிகள் போராட்டத்தில் அசோக் மோச்சி பங்கேற்றுள்ளாரா என்று தேடினோம். அப்போது அவர் பங்கேற்றது தொடர்பான வீடியோ, புகைப்படம் கிடைத்தன.

அசல் பதிவைக் காண: Twitter I Archive 1 I news8plus.com I Archive 2

நம்முடைய ஆய்வில், பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்ற நபர் என்று பகிரப்படும் படம் 2002 குஜராத் வன்முறையின் போது எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் இந்த பதிவு உண்மையும் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குஜராத் கலவரத்தின் போது எடுக்கப்பட்ட படத்தை, பாபர் மசூதி இடிப்பு போராட்டம் என்று தவறாக குறிப்பிட்டுள்ளனர் என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பாபர் மசூதி இடிப்பு போராட்டத்தில் பங்கேற்றாரா அசோக் மோச்சி?

Fact Check By: Chendur Pandian

Result: False