டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றதா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்தியில் திருவள்ளுவர் உருவ சிலை வைக்கப்பட்டிருந்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

டெல்லியில் நடந்த குடியரசு தின ஊர்வலத்தில் இடம் பெற்ற வாகனம் ஒன்றின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “டில்லி குடியரசு தின ஊர்வலத்தில் மத்திய கல்வி துறை சார்பாக இடம்பெற்ற வாகனத்தில் அய்யன் திருவள்ளுவர் உருவ சிலை இடம் பெற்றது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த பதிவை R M SivaKumar Nadar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 26ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் ராணுவ அணிவகுப்பு, மத்திய அரசு துறைகளின் கண்கவர் அலங்கார ஊர்தி, மாநிலங்கள் ஏற்பாடு செய்யும் அலங்கார ஊர்தி, மாணவர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் வடிவமைக்கப்பட்ட ஊர்தியில் சுதந்திரத்துக்காக போராடிய, ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் சிலை இடம் பெற்றிருந்தது.

இந்த ஆண்டுக்கான மைய கருத்துக்கு ஏற்ப ஊர்தி இல்லை என்று கூறி மத்திய அரசு அதை நிராகரித்தது. இந்த சூழலில், தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருவள்ளுவர் சிலையை மத்திய கல்வித் துறை வைத்திருந்தது என்ற வகையில் சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மத்திய அரசோ, மத்திய கல்வித் துறையோ, மத்திய அமைச்சர்களோ, பா.ஜ.க தலைவர்களோ அந்த உருவம் திருவள்ளுவர் என்று கூறவில்லை. பார்ப்பதற்கு முனிவர் போல உள்ளார். காவி உடையில், கையில் ருத்ராட்சம் வைத்துள்ளார். ஓலைச்சுவடி, எழுத்தாணி, திருக்குறள் என அந்த உருவம், திருவள்ளுவர் என்பதற்கு எந்த அடையாளமும் அவரிடம் இல்லை. அப்படி இருக்கும், ஃபேஸ்புக் பதிவருக்கு மட்டும் இது எப்படி தெரியவந்தது என்ற கேள்வி எழுந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

Archive

பிரதமர் மோடி, மத்திய கல்வித் துறை அமைச்சர், கல்வித் துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களைப் பார்வையிட்டோம். அதில் எந்த இடத்திலும் திருவள்ளுவர் சிலை கொண்டு வரப்பட்டது என்று குறிப்பிடவில்லை. வேத காலம் முதல் நவீன காலம் வரையிலான கல்வி என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டது என்று கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஊர்தியின் முகப்பு பகுதியில் நம்முடைய தொடக்க காலத்தில் இருந்து நிலவி வந்த  கல்வி கற்கும் முறையை காட்சிப்படுத்தியுள்ளோம் என்றே குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் திருவள்ளுவரை வைத்துள்ளார்கள் என்ற கருத்து தவறானது என்று உறுதியாகிறது.

Archive

பிரதமர் மோடி வெளியிட்டிருந்த பதிவில் அந்த முனிவரின் ஊர்தியின் முழு தோற்றமும் இருந்தது. மேலும் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வீடியோவை வெளியிட்டிருந்தார். அவற்றில் கூட முனிவர் போல அமர்ந்திருப்பது திருவள்ளுவர் என்று குறிப்பிடவில்லை. அந்த காட்சியைப் பார்க்கும் போது, இந்த ஆண்டு கல்வித் துறையின் மைய கருத்து ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் அது வேத கால குருகுல கல்வி போல இருந்தது. 

Archive

பிரம்மாண்ட முனிவர் சிலைக்கு அருகில், மாணவர்கள் போன்று சிறிய சிறிய சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் அலங்கார ஊர்தி முழுவதுமே, வேத காலம் முறை நவீன தொழில்நுட்ப காலம் வரையிலான கல்வியை காட்சிப்படுத்தியிருந்தனர். இதன் மூலம் அவர்கள் குருகுல கல்வியை நினைவுபடுத்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது.

நம்முடைய ஆய்வில், பிரதமர், மத்திய கல்வித் துறை அமைச்சர், மத்திய கல்வித் துறை அமைச்சகம் வெளியிட்ட பதிவுகளைப் பட்டியலிட்டுள்ளோம். அதில் எங்கும் திருவள்ளுவர் என்று அவர்கள் குறிப்பிடவில்லை. மத்திய கல்வித் துறை அலங்கார ஊர்தியிலிருந்தது திருவள்ளுவர் என்று யாருமே கூறாத நிலையில், ஃபேஸ்புக் பதிவர் விஷமத்தனமாக தவறான தகவல் சேர்த்து வெளியிட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

குடியரசு தின ஊர்லவத்தில் இடம் பெற்ற மத்திய கல்வித் துறை அலங்கார ஊர்தியில் இருப்பது திருவள்ளுவர் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:டெல்லி குடியரசு தின ஊர்வலத்தில் திருவள்ளுவர் சிலை இடம் பெற்றதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False