மான் வேட்டையாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று பகிரப்படும் வங்கதேச வீடியோ!

அரசியல் | Politics இந்தியா | India சர்வதேசம் | International

காங்கிரஸ் எம்.எல்.ஏ பூங்காவுக்கு சென்று மான்களை வேட்டையாடினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பூங்காவில் மான்கள் மேய்ந்து கொண்டிருக்கின்றன. அப்போது கையில் துப்பாக்கி வைத்துள்ள நபர் ஒருவர் மான்களை நோக்கி சுடுகிறார். இறந்த மானின் முன்பு துப்பாக்கியை உயர்த்தி காட்டி போஸ் கொடுக்கிறார்.

நிலைத் தகவலில், “காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் உபாத்யாய் பூங்காவில் மான்களை வேட்டையாட கற்றுக்கொண்டிருக்கிறார். இதை வைரலாக்குங்கள். அவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கும் வரை 😡😡😡.. 🙄 *மோடி மயிலுக்கு உணவளித்ததை கிண்டல் செய்த நாதாரிகளை என்ன செய்வது???” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Vadivel Vel என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஏப்ரல் 3ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை ஃபேஸ்புக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

காங்கிரஸ் எம்.எல்.ஏ பூங்காவுக்குள் நுழைந்து மான்களை வேட்டையாடினார் என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனால் எந்த மாநிலத்தைச் சார்ந்த எம்.எல்.ஏ அவர் என்று குறிப்பிடவில்லை. இந்த சம்பவம் எப்போது நடந்தது என்றும் குறிப்பிடவில்லை. பிரதமர் மயிலுக்கு உணவு அளித்ததைக் கிண்டல் செய்தவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ மானை வேட்டையாடியதற்குக் கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற வகையில் பதிவிட்டுள்ளனர். எனவே, இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

அனில் உபாத்யாய் என்று யாராவது காங்கிரஸ் எம்.எல்.ஏ இருக்கிறார்களா, அவர் மான் வேட்டையாடினாரா என்று தேடினோம். கூகுளில் அனில் உபாத்யாய் காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று டைப் செய்து தேடினோம். அப்படி யாரும் இருப்பதாக செய்தி கிடைக்கவில்லை. இந்தியாவில் நடைபெறும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் பற்றிய விவரத்தை அளிக்கும் myneta.info தளத்தில் அனில் உபாத்யாய் என்று டைப் செய்து தேடினோம். அப்போது அனில் உபாத்யாய் என்று பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த ஒருவர் ராஜஸ்தானில் போட்டியிட்டிருப்பது தெரிந்தது. அனில் குமார் உபாத்யாய் என்று உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் சுயேட்சையாக போட்டியிட்டார் என்ற செய்தி கிடைத்தது. அனில் உபாத்யாய் என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் போட்டியிட்டதாக அதில் தகவல் இல்லை. இதன் மூலம் அனில் உபாத்யாய் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ யாரும் இல்லை என்பது உறுதியாகிறது.

உண்மைப் பதிவைக் காண: myneta.info I Archive

அடுத்து வீடியோவில் இருப்பது யார், எங்கு இந்த சம்பவம் நடந்தது என்று தேடினோம். வீடியோவை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது இது தொடர்பாக பல செய்திகள் நமக்கு கிடைத்தன. இந்த சம்பவம் 2015ம் ஆண்டு வங்கதேசத்தின் சிட்டகாங்கில் நடந்துள்ளது. வீடியோவில் இருப்பது மொயின் உதீன் என்ற வங்கதேசத்தைச் சார்ந்தவர். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வருபவர். இந்த வீடியோவை அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமூக ஊடகங்களில் எதிர்ப்பு வலுக்கவே இது தொடர்பாக வங்க தேச போலீசார் விசாரணை நடத்தினர். வங்கதேசத்தில் மான்களை இறைச்சிக்காக வளர்ப்பது சட்டத்துக்குட்பட்டது என்பதால் உரிய அனுமதி பெறப்பட்டதா என்று மொயின் உதீனிடம் விசாரிக்கப்பட்டது.

உண்மைப் பதிவைக் காண: thedailystar.net I Archive

 ஆஸ்திரேலியாவில் உள்ள அவரிடம் இது தொடர்பாக வங்க தேச போலீசார் விசாரித்ததாகவும், ஆவணங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஆவணங்களை அந்த பண்ணையின் மேலாளர் காட்டவில்லை. இதனால் பண்ணையிலிருந்த 16 மான்களை வனத்துறையினர் கைப்பற்றினர்” என்று 2015ம் ஆண்டு வெளியான வங்கதேச செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய வனத்துறை அதிகாரி ஒருவரும் இந்த வீடியோ வங்கதேசத்தில் எடுக்கப்பட்டது என்று ட்விட்டரில் சில ஆண்டுகளுக்கு முன்பு உறுதி செய்திருந்தார்.

Archive

இதன் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ அனில் உபாத்யாய் பூங்காவுக்குள் நுழைந்து மான்களைச் சுட்டு வேட்டையாடினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பூங்காவுக்குள் நுழைந்து மான் வேட்டையாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மான் வேட்டையாடிய காங்கிரஸ் எம்.எல்.ஏ என்று பகிரப்படும் வங்கதேச வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False