FACT CHECK: தமிழகத்தில் உலா வரும் கண்டெய்னர் அலுவலகம் என்று பரவும் படம் உண்மையா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தமிழகத்தில் சுற்றித் திரியும் கண்டெய்னர் அலுவலகத்தின் படம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அலுவலக அறை போல் காட்சி அளிக்கும் ஒரு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “தொழில்நுட்ப மென் பொருட்களோடு கண்டெய்னரில் அலுவலகம் மாதிரி செட்டப் பண்ணி தமிழகத்தில் உலாவும் லாரிகள் ! ஏன் எதுக்கு?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை தமிழன் மீம்ஸ் 4.0 என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 ஏப்ரல் 16ம் தேதி பதிவிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு திடீர் திடீர் என்று கண்டெய்னர் லாரிகள் கொண்டு வரப்படுவதாக செய்திகள் வருகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் பல முறை விளக்கம் அளித்துள்ளதையும் கருத்தில் எடுக்க வேண்டியள்ளது. இந்த சூழலில் தமிழகத்தில் உலா வரும் கண்டெய்னர் லாரியின் படம் என்று குறிப்பிடவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

தூத்துக்குடியில் பழுதடைந்த வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. கோவையில் கண்டெய்னர் லாரி என்று கூறப்பட்டது. உண்மையில், அது நடமாடும் கழிப்பறை என்பது தெரியவந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், கண்டெய்னர் லாரியில் அலுவலகம் இருந்ததாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. அதுதொடர்பாக எந்த ஒரு செய்தியும் இல்லை.

அசல் பதிவைக் காண: dailythanthi.com I Archive 1 I hindutamil.in I Archive 2

இந்த சூழலில், தமிழகத்தில் உலா வரும் கம்ப்யூட்டர், சாஃப்ட்வேருடன் வலம் வரும் கண்டெய்னர் அலுவலகம் என்று ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இந்த படம் தமிழகத்தில் பிடிபட்ட கண்டெய்னரில் எடுக்கப்பட்ட படமா என்று ஆய்வு செய்தோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றி தேடினோம். அப்போது, அந்த புகைப்படம் இந்தியாமார்ட் என்ற இணையதளத்தில் கண்டெய்னரில் தயாரிக்கப்படும் நடமாடும் அலுவலகம் விற்பனைக்கு என்று விளம்பரம் கொடுத்திருந்தனர்.

அசல் பதிவைக் காண: indiamart.com I Archive

இந்த யூனிட் ரூ.2 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், சதுர அடி ரூ.1500 என்ற அளவில் விற்பனை செய்யப்படுவதாகவும் இதே படத்துடன் பல விளம்பரங்கள் நமக்குக் கிடைத்தன. கண்டெய்னர் தயாரித்து விற்பனை செய்யப்படும் தளத்தில் இருந்து படத்தை எடுத்து தமிழகத்தில் உலாவும் கண்டெய்னர் லாரி என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

இதன் மூலம், தமிழகத்தில் உலா வரும் கண்டெய்னர் அலுவலகம் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

தமிழகத்தில் உலா வரும் கண்டெய்னர் லாரியின் உள்தோற்றம் என்று பகிரப்படும் படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:தமிழகத்தில் உலா வரும் கண்டெய்னர் அலுவலகம் என்று பரவும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False