
தி.மு.க-வின் தலித் அணித் தலைவராக வன்னியரசுவை மு.க.ஸ்டாலின் நியமித்தார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலினுடன் நியூஸ் 7 தமிழ் நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், “தலித்அணி தலைவர் வன்னியரசு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகியான வன்னியரசுவை தி.மு.க கட்சியின் தலித்அணி தலைவராக நியமித்து கழகத் தலைவர் ஸ்டாலின் உத்தரவு” என்று இருந்தது.
நிலைத் தகவலில், “கட்சி’ய கலைச்சுட்டு மொத்தமா திமுகவில் சேர்ந்து விடுங்கடா..! தாய் சிறுத்தை நிலமையை நினைச்சா சிரிப்பு *** வருது..! ” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த பதிவைத் திராவிட திருடன் என்ற ஃபேஸ்புக் பக்கம் 2021 செப்டம்பர் 20 அன்று பதிவிட்டிருந்தது. இதைப் போல பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்தவர். அவருக்கு தி.மு.க,.,வில் பொறுப்பு வழங்கப்பட்டது என்பதைப் பார்க்கும்போதே இது போலியான செய்தி என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது.
தி.மு.க-வில் சாதி அடிப்படையில் அணிகள் உள்ளது போலவும், அதில் வேறு ஒரு கட்சியைச் சேர்ந்தவரை நிர்வாகியாக நியமித்தது போலவும் நியூஸ் கார்டை உருவாக்கியுள்ளனர். எனவே, இது போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வை தொடங்கினோம்.
இந்த நியூஸ் கார்டில் இருந்த தமிழ் ஃபாண்ட் வழக்கமாக நியூஸ் 7 தமிழ் வெளியிடும் ஃபாண்ட் போல இல்லை. மு.க.ஸ்டாலினை “கழகத் தலைவர்” என்று முரசொலி வெளியிடும். மற்ற ஊடகங்கள் தி.மு.க தலைவர் என்றே அழைப்பது வழக்கம். இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதிப்படுத்தின.
செப்டம்பர் 20ம் தேதி நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு இல்லை. எனவே, இது குறித்து நியூஸ் 7 தமிழ் டிஜிட்டல் பிரிவு நிர்வாகி சுகிதாவை தொடர்புகொண்டு கேட்டோம். அவர் இது போலியானது என்று உறுதி செய்தார்.
வன்னியரசுவும் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “அண்ணே @SeemanOfficial சாதி வெறியர்களாக எப்படி பசங்கள வளக்குறீங்கன்னு பாருங்க. என்னை தலித் அணி என்று சொல்வதன் மூலம் சாதிய வன்மத்தையே கக்குறீங்க. நேர்மறையான அரசியலுக்கு வாங்க. பாமக,பாஜக போல வெறுப்பரசியல் பண்ணுவதை நிறுத்துங்க!” என்று குறிப்பிட்டிருந்தார்.

அசல் பதிவைக் காண: Facebook
இந்த ஆதாரங்கள் அடிப்படையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசுவை தி.மு.க தலித் அணித் தலைவராக மு.க.ஸ்டாலின் நியமித்தார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க தலித் அணித் தலைவராக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த வன்னியரசு நியமிக்கப்பட்டதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:தி.மு.க தலித் அணித் தலைவராக வன்னியரசு நியமனம் என பரவும் போலியான நியூஸ் கார்டு!
Fact Check By: Chendur PandianResult: False
