FACT CHECK: அயோத்தி ரயில் நிலையம் என்று பகிரப்படும் படம் உண்மையா?

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் நிலையம் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

அதிநவீன ரயில் நிலையத்தின் புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அயோத்தி ராமர் கோவில் ரயில் நிலையம். ஜெய் ஸ்ரீராம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Sathish Bjp Kili Kili என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 செப்டம்பர் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள அதிநவீன ரயில் நிலையம் என்று படத்தை பலரும் பகிர்ந்து வருகின்றனர். படத்தைப் பார்க்கும் போது டிசைன் போல உள்ளது. நம் ஊரில் இந்த மாதிரியான ரயில் இன்ஜின், பெட்டிகள் இல்லை. ஏற்கனவே, குஜராத் மாநிலம் காந்தி நகர் ரயில் நிலையத்தை அயோத்தி ரயில் நிலையம் என்று வதந்தி பரப்பினர்

அப்போது, அயோத்தியில் ராமர் கோவில் வடிவில் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளது, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன என்று செய்திகளைப் பார்த்திருந்தோம். மேலும் அமைய உள்ள அயோத்தியா ரயில் நிலையம் எப்படி இருக்கும் என்று இந்திய ரயில்வே வீடியோவை வெளியிட்டிருந்தது. அதற்கும் இந்த புகைப்படத்துக்கும் சம்பந்தமே இல்லை. 

இது என்ன புகைப்படம் என்பதை அறிய, இதை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, புதுப்பிக்கப்பட உள்ள புதுடெல்லி ரயில் நிலையம் என்று பல ஊடகங்களும் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. 

அசல் பதிவைக் காண: financialexpress.com I Archive

தொடர்ந்து தேடிய போது இங்கிலாந்தைச் சேர்ந்த கட்டிட வடிவமைப்பு நிறுவனம் ஒன்று இந்த மாதிரியை வடிவமைத்து கொடுத்திருப்பதாகச் செய்திகள் கிடைத்தன. அந்த கட்டிட வடிவமைப்பு நிறுவனத்தின் இணையதளத்துக்குச் சென்று பார்த்தோம். அப்போது, 14 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வடிவமைப்பைத் தயார் செய்து அவர்கள் கொடுத்த விவரம் நமக்குக் கிடைத்தது. 

அசல் பதிவைக் காண: farrells.com I Archive 1 I dwell.com I Archive 2

இதன் மூலம் புதுடெல்லி ரயில் நிலையத்துக்காகக் கொடுக்கப்பட்ட மாதிரி படத்தை, அயோத்தி ரயில் நிலையம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

அயோத்தி ரயில் நிலையம் என்று பகிரப்படும் படம் டெல்லியில் புதிதாக மறுகட்டமைப்பு செய்யப்பட உள்ள ரயில் நிலையத்தின் மாதிரி படம் என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அயோத்தி ரயில் நிலையம் என்று பகிரப்படும் படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •