
மம்தாவை ஆதரித்தார்கள் என்பதற்காக ஒரு குடும்பத்தையே கொலை செய்த ஆர்.எஸ்.எஸ் கும்பல் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
கணவன், மனைவி, மகன் என்று இருக்கும் ஒரு தம்பதியரின் புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ம்மதாவை வை ஆதரித்ததால் இந்த குடும்பத்தையே மொத்தமா வீடு புகுந்து அ’*டிச்சு கொ’*ன்**னானுங்க BJP RSS காவிகள் கும்பள்கள். அந்த சின்ன பையனுக்கு 7 வயசு. ஓட விட்டு பின்னாடி வெ*’ட்டி கொ’*ன்**னானுங்க.
அந்த பெண் நிறை மாத கர்ப்பிணி. படுக்கைல வச்சு கொ’*ன்**னானுங்க. இந்த மாதிரி பல போரோட உயிரையை இன்று BJP RSS காவி கும்பல்கள் செய்து கொண்டு மோடி RSS BJP கும்பல்கள் நகரத்தையே கொள்ளையடித்து, கொ*லை செய்து வெறியாட்டம் ஆடிக்கொண்டியிருக்கிறது. வாக்கு சாவடிகளை கைப்பற்றி திருட்டு வாக்குகள் மெசின்களை பயன்படுத்தி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையத்தை கையில் வைத்து கொண்டு ஆட்டம் போடுகிறது #பாஜக ஆட்சியை கைப்பற்றிய அனைத்து மாநிலங்களும் சூரையாடப்பட்டு காவிகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது இன்று பல நகரங்கள் BJP எதிராக வாக்குப்போட்ட காரணத்தினால் சாம்பாளக்கப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்த அங்கு சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், மம்தாவை ஆதரித்த ஒரு குடும்பத்தின் கணவன், கர்ப்பிணி மனைவி மற்றும் அவர்களது ஏழு வயது மகனை ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் கொலை செய்தார்கள் என்று ஒரு புகைப்படத்துடன் பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த குடும்பம் பல ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டது. பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆதரித்தார் என்பதற்காக கொல்லப்பட்டது என்று பல ஆண்டுகளுக்கு முன்பு வதந்தி பரப்பப்பட்டது நினைவிலிருந்தது. எனவே, இந்த பதிவு தொடர்பாக ஆய்வு செய்தோம். நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழில் இந்த கொலைக்கு அரசியல் காரணம் இல்லை என்று குறிப்பிட்டு 2019ம் ஆண்டு கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதன் பிறகு இந்த வழக்கில் என்ன நடந்தது என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம். இந்த சம்பவத்தின் பின்னணி ஓரளவுக்குத் தெரியும் என்பதால் அது தொடர்பான சில அடிப்படை வார்த்தைகளைப் பயன்படுத்தி கூகுளில் தேடினோம்.
அப்போது, 15 அக்டோபர் 2019ம் ஆண்டு டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டிருந்த செய்தி நமக்கு கிடைத்தது. அதில் இந்த கொலை வழக்கு விசாரணை முடிந்தது. குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளான். கொலையை தான்தான் செய்தேன் என்றும் அவன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive I dnaindia.com I Archive I bbc.com I Archive
காப்பீடு முதிர்வு பணம் பெறுதலில் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நபரின் பெயர் பந்து பிரகாஷ் பால். இவர் ஒரு பள்ளியில் பணியாற்றி வந்துள்ளார். அவர் காப்பீடு முகவராகவும் பணியாற்றி வந்துள்ளார். அவர் தன்னிடம் படித்த உத்பால் பெஹேராவை காப்பீடு திட்டம் ஒன்றில் சேர்த்துள்ளார். அந்த காப்பீட்டுக்கான ப்ரீமியத்தை உத்பால் செலுத்தியிருக்கிறார். ஆனால் அந்த பணத்தைக் காப்பீடு நிறுத்தில் கட்டாமல், அதற்கான ரசீதை வழங்காமல் அலைக்கழித்துள்ளார் பிரகாஷ் பால். இதனால் ஆத்திரமடைந்த உத்பால் இந்த கொலையைச் செய்திருக்கிறார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அப்போது மேற்கு வங்க காவல்துறையின் சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநராக இருந்த ஞானவந்த் சிங் பிபிசி-க்கு அளித்திருந்த பேட்டியில், “இந்த கொலைக்கும் எந்த அரசியல் கட்சிக்கும் தொடர்பில்லை என்பதை இதுவரை நடந்த விசாரணைகள் உறுதி செய்துள்ளன” என்று கூறியிருந்ததும் தெரியவந்தது. இதன் மூலம் 2019ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த கொலை சம்பவம் ஒன்றை இப்போது மேற்கு வங்கத்தில் மம்தா தோல்வியடைந்த சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவாளர் கொல்லப்பட்டது போன்று தவறாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
2019ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் நடந்த கொலை சம்பவத்தின் புகைப்படத்தை வைத்து தற்போது மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ள சூழலில் மம்தாவின் ஆதரவாளர் குடும்பத்துடன் கொலை செய்யப்பட்டார் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


