நிலவை ஆய்வு செய்ய ரஷ்யா அனுப்பிய லூனா 25 நிலவில் விழும் காட்சி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

நிலவில் ராக்கெட்களில் பயன்படுத்தப்படும் பூஸ்டர் எனப்படும் நீண்ட சிலிண்டர் போன்று ஒன்று விழுந்து வெடிக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "இந்தியாவுக்கு முன்னாதாக நிலவை அடைவோம் என பயணித்த ரஷ்யாவின் லூனா-25 நிலவில் விழுந்தது காட்சி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோவை Right Time tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் 2023 ஆகஸ்ட் 23ம் தேதி பதிவிட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நிலவின் தென் பகுதியை ஆராய ரஷ்யா லூனா 25 என்ற ஆய்வு கருவியை அனுப்பியது. ஆனால் அது நிலவின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கியது. நிலவை ஆராய மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றதாக ரஷ்யா அறிவித்தது.

இந்த நிலையில் நிலவில் லூனா 25 மோதிய காட்சி என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவில் சிலிண்டர் போல உள்ளதை லூனா 25 என்று கூறுகின்றனர். ஆனால், அனைத்து செய்தி ஊடகங்களிலும் லூனா 25-வை ஒரு செயற்கைக் கோள் போலக் காட்டியுள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தவே ஆய்வு மேற்கொண்டோம்.

இந்த வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது stock.adobe.com என்ற இணையதளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது தெரிந்தது. அதில், "இரண்டாம் நிலை ராக்கெட் பூஸ்டர் நிலவில் விழுந்து நெருக்கும் காட்சி" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது உள்ளிட்ட எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.

உண்மைப் பதிவைக் காண: stock.adobe.com I Archive

adobe இணையதளத்தில் கிடைத்த தகவலை பயன்படுத்தி கூகுளில் தேடினோம். அப்போது europeantimes.news என்ற இணையதளத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் வௌியான செய்தி ஒன்று கிடைத்தது. கடந்த ஆண்டு (2022) மார்ச் 4ம் தேதி நிலவில் ராக்கெட்டின் சிதைந்த பாகம் விழுந்து வெடித்தது பற்றி அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். இதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட அனிமேஷன் ஜிஃப் புகைப்படம் இது என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வீடியோவுடனான செய்தியை 2022 ஜூன் 25ம் தேதி அவர்கள் பதிவிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: europeantimes.news I Archive

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் குறிப்பிட்டது போன்று ரஷ்யாவின் லூனா 25 நிலவில் மோதிய வீடியோ என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

ரஷ்யாவின் லூனா 25 நிலவில் விழுந்து நொறுங்கும் காட்சி என்று பரவும் வீடியோ 2022ல் நிலவில் ராக்கெட் பூஸ்டர் விழுந்ததின் மாதிரி கம்ப்யூட்டர் வரைகலை காட்சி என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரஷ்யாவின் லூனா 25 நிலவில் விழும் காட்சி என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: False