
திருச்சி பெண் தற்கொலை விவகாரம் தொடர்பாக தவறான செய்தியை வெளியிட்டதற்கு வருத்தம் கேட்கிறோம் என்று பாலிமர் டிவி நியூஸ் கார்டு வெளியிட்டது போன்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தவறான செய்தியை வெளியிட்டதற்கு வருத்தம்! திருச்சி மணச்சநல்லூரில் குடும்பத் தகராறில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஒரு கட்சியை தொடர்பு படுத்தி தவறான செய்தி வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரில் தேர்தலில் பரிசுப் பொருட்கள் தராததைக் கண்டித்த பெண்ணை தி.மு.க நிர்வாகிகள் தாக்கியதாகவும் அதனால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக தி.மு.க நிர்வாகிகளை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இந்த செய்தி தவறானது என்று பாலிமர் டிவி வருத்தம் தெரிவித்துள்ளதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
தி.மு.க நிர்வாகிகள் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளநிலையில், இந்த செய்தி தவறானது என்று பாலிமர் டிவி கூறியிருப்பதாக பரவும் நியூஸ் கார்டு போலியானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம். இப்படி ஒரு நியூஸ் கார்டை பாலிமர் டிவி வெளியிட்டுள்ளதா என்று அதன் சமூக ஊடக பக்கங்களைப் பார்த்தோம். அதில் அப்படி எதுவும் வெளியாகவில்லை.
எனவே, இந்த நியூஸ் கார்டை பாலிமர் டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். மேலும், இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டு அதை நமக்கு அனுப்பினார். அதில், “பாலிமர் செய்திகள் வெளியிட்டதாக சமூக வலைதளத்தில் பரவி வரும் இந்த கார்டு போலியானது. இது தொடர்பாக பாலிமர் செய்திகள் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்பது உறுதியானது.
முடிவு:
இளம்பெண் தற்கொலை விவகாரத்தை திமுக-வுடன் தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டதற்காக வருத்தம் தெரிவித்த பாலிமர் டிவி என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


