ஹரியானாவில் காரில் இருந்து வீசப்பட்ட பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political இந்தியா | India

ஹரியானாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் ஒருவர் காரில் இருந்து வீசப்பட்டார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த காரில் இருந்து பெண் ஒருவர் சாலையில் விழும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மேல், “குர்கான் – ஃபரிதாபாத் சாலையில் 25 வயதான பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓடும் காரில் இருந்து சாலையில் வீசப்பட்டார்” என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. 

நிலைத் தகவலில், “பாஜக ஆட்சியில் ஹரியானாவில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காரில் இருந்து தூக்கி எறியப்பட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மை அறிவோம்:

ஹரியானாவில் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு ஓடும் காரில் இருந்து வீசப்பட்டார் என்று வீடியோ ஒன்றைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர். கடந்த 2025 டிசம்பர் இறுதியில் ஹரியானா மாநிலம் பரிதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சமீபத்தில் அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை.

இந்த வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோவை 2026 மார்ச் இறுதியில் சிலர் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. ஸ்பானிஷ் மொழியிலிருந்த பதிவை மொழிமாற்றம் செய்து பார்த்தபோது, இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்தது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive

மேலும் அதில், “மார்ச் 28 சனிக்கிழமை அன்று இரவு மகாபாவின் வடக்கே உள்ள ரூவா மாடோ க்ரோசோவில் (Rua Mato Grosso, near Pacoval, north of Macap) ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து இளம் பெண் சாலையில் வீசப்பட்டார். இந்த வாகனத்திலிருந்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த கார் பற்றிய தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்புகொள்ளும்படி” குறிப்பிட்டிருந்தனர். அந்த பதிவு மட்டுமின்றி மேலும் ஏராளமான பதிவுகளும் நமக்கு கிடைத்தன.

உண்மைப் பதிவைக் காண: selesnafes.com I Archive

இது தொடர்பாக தொடர்ந்து தேடியபோது இது தொடர்பாக வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன. அதில், “வாகனத்தில் தனது காதலுடன் அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது காதலனை மிரட்டுவதற்காக கதவை திறந்து வெளியே குதித்துள்ளார். இதை அந்த பெண் வாக்குமூலமாகவும் அளித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அது மட்டுமின்றி இந்த சம்பவம் தொடர்பாக அந்த ஊர் செய்தி ஊடகத்தின் நிருபர் போலீஸ் அதிகாரியிடம் எடுத்த பேட்டியும் நமக்கு கிடைத்தது. இவை எல்லாம் இந்த சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்தது இல்லை என்பதை உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

பிரேசிலில் ஓடும் காரில் இருந்து இளம் பெண் ஒருவர் குதித்த வீடியோவை ஹரியானாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்ட பெண் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: ஹரியானாவில் காரில் இருந்து வீசப்பட்ட பெண் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply