மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பஸ்சுக்கு புத்தூர் கட்டு போட்டு, இயக்கப்படுகிறது என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

உடைந்த அரசு பேருந்தின் பம்பர் கயிறு கட்டி வைக்கப்பட்டிருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "சந்திரனுக்கு விக்ரம் லேண்டர் விட்டாலும் நம்ம #பொம்மைமுதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் பஸ்க்கு புத்தூர் கட்டு தான் போடுவார் .." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த பதிவை ArunKumar Selvam என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 ஆகஸ்ட் 24ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பழைய புகைப்படங்களை எல்லாம் எடுத்து வந்து தற்போது திமுக ஆட்சியில் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புவது தொடர்கிறது. எந்த ஆட்சிக்காலத்திலும் அரசு பேருந்துகள் முற்றிலும் நல்ல நிலையில் இயக்கப்பட்டது இல்லை. ஆனால், இந்த ஆட்சியில் மட்டும்தான் பஸ்கள் உடைந்த நிலையில் இயக்கப்படுவது போன்று வதந்தி தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.

உண்மைப் பதிவைக் காண: Facebook

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் 2021 மே மாதத்துக்குப் பிறகு அதாவது தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்டதா என்று மட்டும் ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, சமூக ஊடகங்களில் 2018ம் ஆண்டிலிருந்து இந்த புகைப்படம் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

எந்த செய்தி ஊடகங்களிலும் இந்த புகைப்படம் வெளியானதாக நமக்கு ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஃபேஸ்புக், ட்விட்டர், பிளாக் ஸ்பாட் போன்றவற்றில் 2018ம் ஆண்டில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

Archive

மு.க.ஸ்டாலின் ஆட்சி என்பது 2021 மே மாதத்துக்குப் பிறகு தான். ஆனால், இந்த புகைப்படங்கள் 2018ம் ஆண்டில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்த புகைப்படம் திமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது இல்லை என்பது தெளிவாகிறது.

முடிவு:

திமுக ஆட்சியில் புத்தூர் கட்டுடன் இயக்கப்படும் அரசு பேருந்து என்று பரவும் படம் 2018ம் ஆண்டில் இருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இயக்கப்படும் உடைந்த பஸ் என்று பரவும் படம் இப்போது எடுக்கப்பட்டதா?

Written By: Chendur Pandian

Result: False