டெய்சி - சூர்யா பெயரில் சிறந்த அக்கா - தம்பிக்கான போட்டி நடத்தப்படும், கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்ததாக சில நையாண்டி நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தந்தி டிவி வெளியிட்டது போன்று சில நியூஸ் கார்டுகளை நெட்டிசன்கள் சிலர் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நியூஸ் கார்டில், "டெய்சி-சூர்யா பெயரில் சிறந்த அக்கா-தம்பிக்கான போட்டி. டெய்சி சரண் - திருச்சி சூர்யா போன்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாஜக சார்பில் மெரினாவில் சிறந்த அக்கா - தம்பிக்கான போட்டிகள் நடத்தப்படும் - அண்ணாமலை திட்டவட்டம்" என்று இருந்தது.

இந்த நியூஸ் கார்டை Arun Bala என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 25ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook

மற்றொரு கார்டில், "சூர்யா பெயரில் கலை இலக்கிய போட்டிகள். திருச்சி சூர்யா போன்றவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தப்படும் - அண்ணாமலை திட்டவட்டம்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை Saleemdevaraj Yesudhas என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 நவம்பர் 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இந்த நியூஸ் கார்டை பலரும் தங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் டெய்சி சரண் மற்றும் திருச்சி சூர்யா சிவாவுக்கு இடையேயான தொலைப்பேசி உரையாடல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இருவரும் சமாதானமாகச் சென்றுவிட்டதாகப் பின்னர் பேட்டி அளித்தது இன்னும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திருச்சி சூர்யா சிவா மீது நடவடிக்கை எடுத்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் தமிழ்நாடு பா.ஜ.க-வின் இந்த நடவடிக்கைகளை வைத்து சிலர் நையாண்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். அதே நேரத்தில் அந்த நையாண்டிகள் விஷமப் பதிவாக மாறி சமூக ஊடகங்களில் வைரல் ஆனது. அதை ஃபேக்ட் செய்து கட்டுரை வெளியிட்டிருந்தோம். நையாண்டி பதிவுகள் அனைத்தையும் ஃபேக்ட் செக் செய்வது இல்லை. தொலைக்காட்சி, செய்தி ஊடகங்கள் வெளியிட்டது போன்று அவர்கள் லோகோவுடன் நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிடும் போது அதைச் சிலர் உண்மை என்று கருத வாய்ப்பு உள்ளது என்பதால் ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம். அந்த வகையில் இந்த நியூஸ் கார்டுகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

நிச்சயம் இந்த நியூஸ் கார்டுகளை தந்தி டிவி வெளியிட்டிருக்காது என்றாலும் அதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வு செய்தோம். முதலில் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று நியூஸ் கார்டு எதுவும் இல்லை. இருப்பினும் உண்மையில் தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடல் மூலம் தேடினோம். அப்போது, கடந்த நவம்பர் 17, 2022 அன்று இதே புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டை தந்தி டிவி தன்னுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் வெளியிட்டிருப்பது தெரிந்தது.

Archive

அதில், "பிரியாவின் பெயரில் கால்பந்தாட்ட போட்டி. பிரியாவின் பெயரில் சென்னை முழுவதும் கால்பந்தாட்ட போட்டியை பாஜக நடத்த உள்ளது. பிரியாவின் சகோதரர்கள் தேர்வு செய்யும் 10 பெண்களின் பயிற்சிக்கான செலவை பாஜக ஏற்கும் - அண்ணாமலை" என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

இதை உறுதி செய்துகொள்ள நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இரண்டு நியூஸ் கார்டுகளையும் தந்தி டிவி டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு அனுப்பி, இது உண்மையா என்று கேட்டோம். அவர் ‘இவை உண்மையல்ல; போலி,’ என்று உறுதி செய்தார்.

நையாண்டி பதிவுகளை வெளியிடுவதில் ஃபேக்ட் கிரஸண்டோ தலையிடவில்லை. ஊடகங்கள் வெளியிட்டது போன்று அவர்களது லோகோவுடன் வெளியிடும்போது அது உண்மை என்று மக்கள் கருத வாய்ப்பு உள்ளதால் அதை ஆய்வுக்கு எடுத்துக்கொள்கிறோம். இதன்படி, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு நையாண்டிக்கு வெளியிட்டது என்றாலும் தந்தி டிவி வெளியிட்டது போன்று பகிர்ந்திருப்பதால் இது போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

டெய்சி – திருச்சி சூர்யா பெயரில் சிறந்த அக்கா – தம்பி போட்டி, கலை இலக்கிய போட்டிகள் நடத்தப்படும் நியூஸ் கார்டுகள் போலியானவை என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சிறந்த அக்கா - தம்பிக்கான போட்டி நடத்தப்படும் என்று அண்ணாமலை அறிவித்தாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False