அண்ணாமலை பிண அரசியல் செய்கிறார் என்று மொட்டையாகக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள சூழலில், அண்ணாமலை இந்த விவகாரம் தொடர்பாக பேசியது போன்ற தோற்றத்தை இந்த வீடியோ ஏற்படுத்தவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive 1 I x.com I Archive 2

பெண்மணி ஒருவர் போனில் பேசும் வீடியோ ஃபேஸ்புக் மற்றும் எகஸ் தளத்தில் பதிவிடப்பட்டு வருகிறது. அண்ணாமலையிடம் பேசுவது போல ஆடியோ கேட்கிறது. அதில், "அக்யூஸ்ட் (குற்றவாளி) அரெஸ்ட் ஆகிற வரைக்கும் எந்த காரணத்துக்கும் நாம பாடி-ய வாங்கப்போறது கிடையாது" என்று அண்ணாமலை கூறுகிறார். அதற்கு அந்த பெண்மணியும் ஒத்துழைப்பு அளிப்பதாக கூறுகிறார். இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்த வருகின்றன. இந்த சூழலில் அண்ணாமலை உடலை வாங்க வேண்டாம் என்று கூறியது போன்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால், வீடியோவில் எந்த இடத்திலும் இது கள்ளக் குறிச்சியில் நடந்தது என்று குறிப்பிடப்படவில்லை. எனவே, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை பேசினார் என்று எடுத்துக்கொள்ளவும் முடியாது.

எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம். சமூக ஊடகங்களில் உடலை வாங்கக் கூடாது அண்ணாமலை என்று குறிப்பிட்டுத் தேடினால் இந்த வீடியோவை 2023 செப்டம்பர் 1ம் தேதி சிலர் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதில், "திருநெல்வேலி வடக்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் சகோதரர் ஜெகன் பாண்டியன் கொலை செய்த கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க வேண்டாம் என தலைவர் @annamalai_k உத்தரவு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோவுக்கும் கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்பது தெளிவானது.

Archive

வேறு ஆதாரங்கள் கிடைக்கிறதா என்று திருநெல்வேலி, பாஜக, ஜெகன் பாண்டியன், கொலை, அண்ணாமலை என்று அடிப்படை வார்த்தைகள் சிலவற்றை கூகுள், யூடியூபில் டைப் செய்து தேடினோம். அப்போது இந்த வீடியோவை பாலிமர் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்கள் 2023 செப்டம்பரில் வெளியிட்டிருப்பது தெரிந்தது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 2024 ஜூன் மாதம் நடந்தது. ஆனால் இந்த வீடியோ 2023 செப்டம்பரில் பதிவிடப்பட்டுள்ளது. பழைய வீடியோவை எடுத்து குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட் செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர். முழுமையான வீடியோ, முழுமையான தகவலை வெளியிடாததால் இது ஏதோ கள்ளக்குறிச்சி தொடர்பான வீடியோ என்ற தவறான தகவலை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்துகிறது.

அதே நேரத்தில் வீடியோ பொய் இல்லை. அண்ணாமலை 2023 செப்டம்பரில் தன் கட்சி நிர்வாகி கொலை சம்பவத்தின் போது பேசியது உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் போதுமான விவரங்களை வேண்டுமென்றே மறைத்து வெளியிட்ட பதிவு இது என்பது தெளிவாகிறது.

முடிவு:

2023ல் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட போது பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் அண்ணாமலை பேசியதை இப்போது நடந்தது போன்று உண்மை விவரங்களை மறைத்து பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் உடலை வாங்க வேண்டாம் என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: Missing Context