சூதாட்டம் என்பது இந்து மதத்தின் அங்கம் என்று அண்ணாமலை கூறினாரா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

சூதாட்டம் என்பது மகாபாரத காலத்தில் இருந்து இந்து மதத்தின் அங்கம். அதை ஒழிப்பது இந்து கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சி என்று அண்ணாமலை கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

தமிழ்நாடு பாஜக வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “சூதாட்டம் என்பது மஹாபாரத காலத்திலிருந்தே ஹிந்து மதத்தின் ஒரு அங்கம். ஆன்லைன் சூதாட்டங்களை முறைப்படுத்தலாமே தவிர அறவே ஒழிப்பது என்பது உள்நோக்கம் கொண்டது. ஹிந்து கலாச்சார அடையாளங்களை அழிக்கும் முயற்சி. – கே.அண்ணாமலை தலைவர், தமிழ்நாடு பாஜக” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த புகைப்பட பதிவை Krishna Kumar என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 1ம் தேதி பதிவிட்டிருந்தார். இவரைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஆன்லை சூதாட்டம் கூடாது என்பதுதான் அனைத்து கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் கூட ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார். அப்படி இருக்கும் போது ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வது இந்து மத கலாச்சார அடையாளங்களை அழிக்கும் முயற்சி என்று எல்லாம் அண்ணாமலை கூற வாய்ப்பில்லை. இது போலியானதாக இருக்கலாம் என்பதன் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

இப்படி ஏதேனும் நியூஸ் கார்டை தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ளதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். ஆனால், அதில் அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை தமிழ்நாடு பாஜக நிர்வாகி ஒருவருக்கு அனுப்பினோம். அவர் இது போலியானது என்று குறிப்பிட்டார்.

மேலும், இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக ஐடி மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவர் நிர்மல் குமார் ட்வீட் வெளியிட்டுள்ளார் என்று நம்மிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் நிர்மல் குமார் வெளியிட்ட ட்வீட்டை தேடி எடுத்தோம்.

Archive

அதில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டதுடன், திமுக ஐடி பிரிவு உருவாக்கிய போலி நியூஸ் கார்டு என்றும் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிப்பது இந்து மத அடையாளங்களை அழிக்கும் செயல் என்று அண்ணாமலை கூறியதாகப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சூதாட்டம் மகாபாரம் காலத்திலிருந்தே இந்து மதத்தின் ஒரு அங்கமாக இருக்கிறது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சூதாட்டம் என்பது இந்து மதத்தின் அங்கம் என்று அண்ணாமலை கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False