உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது இயேசுவை ஆராதிக்கும் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

சமயம் சமூக ஊடகம் சர்வதேசம்

உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் முழந்தாள் படியிட்டபடி நடந்து இயேசுவுக்கு நன்றி கூறிய கால்பந்தாட்ட வீரர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

கால்பந்தாட்ட வீரர்கள் இருவர், முழந்தாள் படியிட்டு, கையில் பைபிள் ஏந்தியபடி பிரார்த்தனை செய்துகொண்டே கால்பந்து மைதானத்தை கடக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “Thank you JESUS.Happy Christmas உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மைதானத்தில் இயேசுவை ஆராதிக்கும் விளையாட்டு வீரர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை Jesus Love all People என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 டிசம்பர் 5ம் தேதி பதிவிட்டுள்ளது. இதை பலரும பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கத்தார் நாட்டில் நடந்து வரும் கால்பந்து போட்டியை வைத்து மதம் தொடர்பான வதந்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. மைதானத்தில் கால்பந்தாட்ட வீரர்கள் இயேசுவை ஆராதித்தனர் என்று தற்போது சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

ஆனால், மைதானத்தை பார்க்கும் போது உலகக் கோப்பை கால்பந்தாட்ட மைதானம் போல இல்லை. மேலும், மைதானத்துக்குள் காவலர்கள் நிற்கின்றனர். அவர்களும் கத்தார் போலீஸ் போல இல்லை. எனவே, பழைய வீடியோ எதையே பகிர்ந்திருக்கலாம் என்று கருதி இந்த பதிவை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

வீடியோ காட்சியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். பல்வேறு புகைப்படங்களை மாற்றி மாற்றிப் பதிவேற்றித் தேடிய போது, சில நாட்களுக்கு முன்பு இந்த வீடியோ மற்றும் செய்தியை பல (வெளிநாட்டு) ஊடகங்களும் பகிர்ந்திருப்பதைக் காண முடிந்தது. அதில், கவுதமாலா நாட்டில் இந்த சம்பவம் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: soy502.com I Archive 1 I emisorasunidas.com I Archive 2

வெளியான பதிவுகள் எல்லாம் ஸ்பானிஷ் மொழியில் இருந்தன. எனவே, அவற்றை மொழியாக்கம் செய்து பார்த்தோம். அப்போது, கவுதமாலா நாட்டில் நடந்த உள்ளூர் கால்பந்தாட்ட போட்டியின் போது Coatepeque என்ற அணி Apertura 2022 முதல் டிவிஷன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது என்றும் அந்த அணியின் Denilson Ochaeta மற்றும் Alexander Moreales என்ற வீரர்கள் மைதானத்தில் பைபிளை கையில் ஏந்தி, முட்டியிட்டபடி நடந்து பிரார்த்தனை செய்தனர் என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பான வீடியோக்கள், ட்வீட், செய்திகள், ஃபேஸ்புக் பதிவுகள் பல நமக்கு கிடைத்தன.

Archive

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட்டு வீரர்கள் பைபிள் ஏந்தி, இயேசுவை வழிபட்டனர் என்று பரவும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கவுதமாலா நாட்டில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியைச் சார்ந்த வீரர்கள் மைதானத்திலேயே முட்டிபோட்டு நடந்து இயேசுவுக்கு நன்றி சொன்ன வீடியோவை ஃபிஃபா உலக கோப்பையின் போது எடுக்கப்பட்டது என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது இயேசுவை ஆராதிக்கும் வீரர்கள் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False