FACT CHECK: பிரான்ஸ் அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகினாரா?

சமூக ஊடகம் சர்வதேசம்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

பிரான்ஸ் கால்பந்தாட்ட அணி வீரரின் படங்கள் பகிரப்பட்டுள்ளன. நிலைத் தகவலில், “பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macronயின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கையினால் France கால்பந்தாட்ட அணியின் தலைவரும் கடந்த வருடம் France உலக கோப்பையை சுவீகரிப்பதற்கு முக்கிய வீரராகவும் செயல்பட்ட Paul Pogba France கால்பந்தாட்ட  அணியில் இருந்து விலகியுள்ளார் வாழ்த்துக்கள்” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த பதிவை CWF QATAR என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 அக்டோபர் 29ம் தேதி பகிர்ந்துள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரான்சில் மதச் சுதந்திரத்தை விட தனி மனித சுதந்திரம் அதிகம். தனி மனித சுதந்திரம் காரணமாக மத உரிமைகள் பாதிக்கப்படுவதாக அனைத்து தரப்பிலிருந்தும் புகார் எழுவது உண்டு. 

இந்த நிலையில் இஸ்லாமியர்களின் இறைத்தூதர் பற்றிய கேலிச்சித்திரத்தைக் காட்டி மாணவர்களுக்கு பாடம் நடத்திய பள்ளி ஆசிரியர் தலையை வெட்டி கொலை செய்யப்பட்டது பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தியது. மத அடிப்படை வாதத்துக்கு எதிராக என்று கூறி பிரான்ஸ் அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. அது உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

பிரான்சை கண்டித்து அந்நாட்டு தயாரிப்புகளை இஸ்லாமியர்கள் புறக்கணித்ததாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. பிரான்சில் இஸ்லாமியர்கள் சித்ரவதை செய்யப்படுவதாக பல தவறான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகிறது. அவ்வப்போது ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவு ஆய்வு மேற்கொண்டு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் பால் போக்போ பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் என சமூக ஊடகங்களில் பலரும் வைரலாக பதிவிட்டு வருகின்றனர்.

இதன்பேரில், முதலில் அவருடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களை ஆய்வு செய்தோம். அப்போது இங்கிலாந்திலிருந்து வெளியாகும் தி சன் என்ற ஊடகம் பால் போக்போ பிரான்சுக்காக விளையாடுவதில் இருந்து வெளியேறினார் என்று செய்தி வெளியிட்டிருந்ததாகவும், இது தவறானது எனவும் போக்போ வெளியிட்டிருந்த பதிவுகள் கிடைத்தன.

Archive

இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தி சன் வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட் மீது ஃபேக் நியூஸ் என்று முத்திரை வைத்துப் பகிரப்பட்டிருந்தது.

2020 அக்டோபர் 26ம் தேதி வெளியிடப்பட்டிருந்த அந்த பதிவில், “தி சன் மறுபடியும் செய்துள்ளது. இது 100 சதவிகிதம் உண்மையில்லாத செய்தி. இது பற்றி நானோ, என்னைச் சுற்றியுள்ளவர்களோ எதையும் கூறவில்லை. எனக்கு நெருக்கமானவர்களிடம் கூட இப்படி ஒரு கருத்தை நான் கூறியது இல்லை. சில ஊடகங்கள் என்னைப் பயன்படுத்தி என்னுடைய விளையாட்டு மற்றும் மதத்தைச் சேர்த்து முழுக்க முழுக்க பொய்யான தலைப்புச் செய்திகளை உருவாக்கி வெளியிடுவது எனக்கு கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது. 

அசல் பதிவைக் காண: instagram.com I Archive

எந்த ஒரு பயங்கரவாதத்திற்கும் வன்முறைக்கும் நான் எதிரானவன். எனது மதம் அமைதி மற்றும் அன்பானது, அது கட்டாயம் மதிக்கப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக சில பத்திரிகையாளர்கள் செய்தியை எழுதும் பொது பொறுப்புணர்வுடன் எழுதாமல் தங்கள் பத்திரிகை சுதந்திரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, உண்மையை சரி பார்க்காமல், பொய்யானதை எழுதும் போது அது என்னுடைய மற்றும் பலருடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது. 100 சதவிகிதம் பொய்யான செய்தியை வெளியிட்ட பதிப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறியிருந்தார்.

அசல் பதிவைக் காண: sports.ndtv.com I Archive

பால் போக்போவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல ஊடகங்களும் பால் போக்போ ஓய்வு பெறப்போவதாக வெளியான வதந்தி, பொய்யான செய்தி என்று பதிவிட்டிருந்ததை காண முடிந்தது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரான்ஸ் அதிபர் மெக்ரோனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்ஸ் கால்பந்தாட்ட அணியில் இருந்து பால் போக்போ விலகியதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் பிரான்சில் கால்பந்தாட்ட வீரர் பிரான்ஸ் அணியில் இருந்து விலகினார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிரான்ஸ் அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து கால்பந்தாட்ட அணியிலிருந்து பால் போக்போ விலகினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False