அர்ஜென்டினாவின் கரன்சி நோட்டில் மெஸ்ஸி படம் அச்சிடப்பட்டதா?

சமூக ஊடகம் | Social சர்வதேசம் | International விளையாட்டு

அர்ஜென்டினாவின் 1000 பெசோ கரன்சி நோட்டில் மெஸ்ஸியின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அர்ஜென்டினாவின் 1000 பெசோ நோட்டில் லியோனல் மெஸ்ஸி புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது போல புகைப்பட பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில், அர்ஜென்டினா கரன்சியில் மெஸ்ஸியின் படம்! 2022 FIFA World Cup வெற்றியைக் கவுரவிக்கும் விதமாக அர்ஜென்டினாவின் 1000 மதிப்புடைய கரன்சியில் மெஸ்ஸியின் படமும், பயிற்சியாளரான லியோனல் ஸ்கலோனியை குறிக்கும் “La Scaloneta” என்ற வார்த்தையையும் அச்சிடுவது குறித்து ஆலோசனை. – அர்ஜென்டினா ரிசர்வ் வங்கி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நியூஸ் கார்டை Jaya Plus ஊடகம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் டிசம்பர் 22, 2022 அன்று பதிவிட்டிருந்தது. 

உண்மைப் பதிவைக் காண: Facebook 

இதே போன்று வேறு சிலரும் இதே தகவலை பகிர்ந்திருந்தனர். வேறு ஒரு நியூஸ் கார்டில், “1000 Pesos மதிப்புடைய கரன்சி நோட்டில் மெஸ்ஸி புகைப்படம்! 36 ஆண்டுகள் கழித்துக் கால்பந்து உலகக்கோப்பையை வென்று கொடுத்த மெஸ்ஸியை கௌரவப்படுத்தும் விதமாக அர்ஜென்டினாவின் கரன்சி நோட்டுகளான பெசோவில் மெஸ்ஸியின் புகைப்படத்தை அச்சிட அந்நாட்டு வங்கி ஆலோசித்து வருகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த பதிவை News Cafe Tamil என்ற ஃபேஸ்புக் பக்கம் 2022 டிசம்பர் 23ம் தேதி பதிவிட்டுள்ளது. இதைப் போல பலரும் இந்த தகவலைப் பதிவிட்டுள்ளனர்.

உண்மை அறிவோம்:

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸியை கவுரவிக்கும் வகையில் அந்நாட்டு ரிசர்வ் வங்கி 1000 மதிப்புடைய பணத்தில் மெஸ்ஸியின் படத்தை அச்சிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று குறிப்பிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. இப்படி ஏதேனும் அறிவிப்பை அர்ஜென்டினா நாட்டின் மத்திய வங்கி வெளியிட்டதா என்று ஆய்வு செய்தோம்.

முதலில் அர்ஜென்டினாவின் மத்திய வங்கியின் (Banco Central de la República Argentina) இணையதளத்திற்குச் சென்று இப்படி ஏதும் அறிவிப்பு வெளியானதா என்று பார்த்தோம். ஆனால் அதில் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. அதன் சமூக ஊடக பக்கங்களில் பார்த்தோம். அதிலும் அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதே நேரத்தில் கால்பந்து தொடர்பாக நாணயங்களை வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதிலும் கூட மெஸ்ஸியின் உருவப் படம் இல்லை. கால்பந்தை உதைப்பது போன்று 5 மற்றும் 10 பெசோ நாணயங்கள் வெளியிட்டிருப்பது தெரிந்தது. அதுவும் கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடங்குதவற்கு ஓராண்டுக்கு முன்பாக (2021ம் ஆண்டில்) வெளியிட்டிருப்பது தெரிந்தது. கடைசியாக 2022 மே மாதம் புதிய கரன்சி நோட்டுக்களை அந்நாட்டு மத்திய வங்கி வெளியிட்டிருப்பதும் தெரிந்தது.

உண்மைப் பதிவைக் காண: bcra.gob.ar I Archive

மெஸ்ஸி உருவப்படத்துடன் கரன்சி நோட்டு அச்சடிக்கப்படுவது குறித்து அந்நாட்டு மத்திய வங்கி நிர்வாகி யாராவது பேட்டி அளித்தாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் அந்நாட்டு ஊடகங்களில் வெளியாகி உள்ளதா என்று அறிய ஸ்பானிஷ் மொழியில் சில கீ வார்த்தைகளை மொழிமாற்றம் செய்து கூகுள் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது அந்நாட்டு ஃபேக்ட் செக் ஊடகங்கள் வெளியிட்டிருந்த கட்டுரைகள் நமக்குக் கிடைத்தன.

சமூக ஊடகங்களிலும் செய்தி ஊடகங்களிலும் பரவி வரும் இந்த தகவல் குறித்து அர்ஜென்டினா நாட்டின் மத்திய வங்கி ஊடகப் பிரிவு நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு கேட்டதாகவும், மெஸ்ஸியை கவுரவிக்கும் வகையில் 1000 கரன்சி நோட்டில் அவர் புகைப்படத்தை அச்சிடுவது பற்றி எந்த ஒரு தகவலும் தங்களுக்கு வரவில்லை. அப்படி ஆலோசனை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அப்படி எந்த ஒரு யோசனையும் இல்லை, ஆய்வு செய்யவும் இல்லை. 

மேலும் மெஸ்ஸி புகைப்படத்துடன் கூடிய புதிய 1000 கரன்சி நோட்டு மாதிரி எதையும் மத்திய வங்கி வெளியிடவில்லை” என்று கூறியதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும், யாரோ போலியாக உருவாக்கிய கரன்சி நோட்டுக்களை உண்மைத் தன்மை அறியாமல் பலரும் பகிர்ந்து வருவதாக அதில் குறிப்பிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: chequeado.com I bloomberglinea.com I afp.com

இதன் மூலம் அர்ஜென்டினாவின் 1000 பெசோ நோட்டில் மெஸ்ஸி படத்தை அச்சிடவில்லை, அது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு மத்திய வங்கி எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை, சமூக ஊடகங்களில் பரவும் தகவல் வெறும் வதந்தி என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் தவறான தகவலைப் பரப்பும் வகையில் இருப்பது உறுதியாகிறது.

முடிவு:

உலகக்கோப்பையை வென்றதால் மெஸ்ஸியின் படத்தை 1000 கரன்ஸி நோட்டில் அச்சடிக்க அர்ஜென்டினா மத்திய வங்கி திட்டமிட்டிருப்பதாக பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:அர்ஜென்டினாவின் கரன்சி நோட்டில் மெஸ்ஸி படம் அச்சிடப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False