பெண்களை பல ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்படி பெரியார் சொன்னாரா?
‘’பெண் விடுதலை பெற வேண்டுமெனில் பல ஆண்டுகளுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள் என்று பெரியார் சொன்னார்,’’ எனும் தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில் உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link I Archived Link
Praveen Marutham என்பவர் ஜூலை 2, 2019 அன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், பெரியார் சொன்னதாகக் கூறி, ‘’பெண்களுக்கு விடுதலை வேண்டுமானால் நான் சொல்வதைக் கேள். முதலில், நீ கற்போடு இருக்காதே. பல ஆண்களோடு உறவு வைத்துக் கொள். சேலையை கழட்டி வீசு. கவுன் போட்டுக் கொள். தலையில் கூந்தலை வெட்டி வீசு. கிராப் வைத்துக் கொள். சமையலறையை உடைத்து எறி. குழந்தைகளை நீ பார்க்காதே. இரவில் வீட்டிற்கு வராதே. இதுவே பெண் விடுதலைக்கான பாதை,’’ என்று எழுதிய மீம்ஸ் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் செய்தி முதலில் உண்மையா, இல்லையா என்ற சந்தேகம் இருந்தாலும், அந்த பதிவின் கீழே உள்ள கமெண்ட்களை ஒருமுறை படித்துப் பார்த்தோம். அதில், பலரும் இது தவறான தகவல், பெண் விடுதலை பற்றி எந்த புத்தகத்தில் பெரியார் இப்படி சொன்னார் என்ற விரிவான தகவல் தேவை என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
இதில் இருந்தே மேற்கண்ட நபர் தனது பதிவின் வைரலாட்டி நோக்கத்திற்காக, இப்படி யாரோ விவரம் தெரியாதவர் தயாரித்த மீம்ஸை பகிர்ந்திருக்கிறார் என தெளிவாகிறது.
உண்மையில் பெண் விடுதலை பற்றி பெரியார் என்ன சொன்னார் என்றால், ஆண் பெண் சமம், பெண்களுக்கு முறையான கல்வி, வேலைவாய்ப்பு, சுய பொருளாதார பலம் உள்ளிட்டவை கிடைக்க வேண்டும் என்றுதான் சொன்னார். மேலும், ஆண்களைப் போல பெண்களும் உடை, சிகை அலங்காரம் செய்துகொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், பல ஆண்களுடன் உறவு கொள், இரவில் வீட்டிற்கு வராதே என்பது போன்ற கருத்துகளை அவர் சொல்லவில்லை.
இதுபற்றிய ஆதாரத்திற்கு பெண் ஏன் அடிமையானாள் என்பது பற்றி பெரியார் எழுதிய புத்தக இணைப்பை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதுதவிர, கிராப் வெட்டிக் கொண்டு தங்களை அழகுபடுத்திக் கொள்வதுடன் பெண்ணின் விடுதலை முடிந்துவிடுவதில்லை. அதற்கும் மேல் சுய விடுதலை பற்றி சிந்திக்க வேண்டும் என்றே அவர் வலியுறுத்தியுள்ளார். ஆதாரச் செய்தி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இதேபோல, கற்பு பற்றி அவர் கூறிய கருத்துகளை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். இதேபோல நிறைய அவர் கூறியிருக்கிறார். அவற்றை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ஆண், பெண் சமம் என்றுதான் பெரியார் வலியுறுத்தினாரே தவிர, பெண்களோ, ஆண்களோ இஷ்டம்போல நினைத்தவருடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டு ஊர் சுற்றலாம் என்று அவர் சொல்லவே இல்லை. இதை பெரியாரிய கருத்தை எதிர்ப்பவர்கள் மட்டுமல்ல, பெரியாரை ஆதரிக்கும் பெண்ணியவாதிகள் பலரும் கூட புரிந்துகொள்வதில்லை. பெரியார் இப்படியெல்லாம் சொன்னார் என, அவர் சொல்லாததை இவர்களாகவே சொல்லிக் கொண்டு சமூக ஊடகங்களில் வதந்தி பரப்புகிறார்கள். அப்படியான பதிவுதான் மேலே உள்ளதும்.
எனவே, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் உண்மையில்லை என உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:பெண்களை பல ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளும்படி பெரியார் சொன்னாரா?
Fact Check By: Pankaj IyerResult: False