
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதைக் கொண்டாடும் விதத்தில் பசுவைக் கொன்று பாஜக கொடி மீது ரத்தத்தைத் தெளித்த இஸ்லாமியர்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பசுமாடு ஒன்றைக் கொல்லும் கொடூர வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “கர்நாடகாவில் காங்கிரசின் வெற்றியைக் கொண்டாடும் இஸ்லாமியர்கள்…
கோமாதாவை கொன்று பாரதிய ஜனதா கட்சியின் கொடியின் மீது ரத்தத்தை தெளித்து இந்துக்களுக்கு சவால் விட்டு ஏதோ செய்தி சொல்கிறார்கள் இனி இந்துக்களுக்கு இந்து என்ற உணர்வு வரவில்லை என்றால் இந்த கோமாதாவின் நிலைதான் இந்துக்கள் அனைவருக்கும்…. என்ற செய்தி புரிகிறது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Murugesan A என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2023 மே 19ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இந்த வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் இந்துக்களுக்கு ஆபத்து, கலவரங்கள் வெடிக்கும் என்பது போன்று வெறுப்பு பிரசாரம் செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற பிறகு சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. பசுவைக் கொன்று அதன் ரத்தத்தை பாஜக கொடி மீது இஸ்லாமியர்கள் தெளித்தார்கள் என்று வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.
இந்த தகவல் உண்மையில்லை என்பதை உறுதி செய்வதற்காக ஆய்வு செய்தோம். வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது கடந்த ஆண்டு (2022) ஜனவரி 31ம் தேதி இந்த வீடியோவை பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அதில், இந்த சம்பவம் மணிப்பூர் மாநிலத்தில் நடந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ 2023 மே கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற பிறகு கர்நாடகாவில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியானது.
இந்த வீடியோ தொடர்பாக அறிந்துகொள்ள, அந்த ட்விட்டர் பதிவைப் பார்த்தோம். அதில், மணிப்பூரில் இஸ்லாமியர்கள் பசுவைக் கடத்தி பாஜக கொடியை அடியில் வைத்து பசுவைக் கொன்றுள்ளனர். மணிப்பூர் முதல்வர் மற்றும் மணிப்பூர் பாஜக தலைவரைத் துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை ஊடகவியலாளர் பகிர்ந்திருப்பது தெரிந்தது. மணிப்பூரில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு கமெண்ட் பகுதியில் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் செய்தி ஒன்றின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்திருந்தார். அதில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்” என்று இருந்தது. மேலும் பீட்டா அமைப்பும் கமெண்ட் செய்திருந்தது. அதில், Lilong போலீஸ் மூன்று பேர் மீது 153ஏ, 504, 429 செக்ஷனின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தது. தொடர்ந்து தேடிய போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளத்தில் கட்டுரை வெளியாகி இருந்தது. அதில், இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதன் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டிருந்தனர்.

உண்மைப் பதிவைக் காண: thehindu.com I Archive
இதன் மூலம் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதைப் பசுவை வெட்டி முஸ்லிம்கள் கொண்டாடினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு விஷமத்தனமானது, சமூகத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை பசுவைக் கொன்று இஸ்லாமியர்கள் கொண்டாடினார்கள் என்று மணிப்பூரில் நடந்த வேறு ஒரு சம்பவத்தின் வீடியோவை வைத்து சமூக ஊடகங்களில் சமூக விரோதிகள் வதந்தியை பரப்பி வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கர்நாடகாவில் பசுவைக் கொன்று காங்கிரஸ் வெற்றியைக் கொண்டாடிய இஸ்லாமியர்கள் என்று பரவும் வதந்தி!
Fact Check By: Chendur PandianResult: False
