
கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்து இந்தி நடிகர் அமீர் கான் வழங்கியதாக பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
நடிகர் அமீர் கான், மாவு பாக்கெட்டில் பணம் இருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஒவ்வொரு மாவு பாக்கெட்டுக்குள்ளும் 15000 ரூபாய் ஏழைகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி. டில்லியில் ஏழைகள் வாழ்கிற பகுதிக்கு -23/04/2020- இரவில் ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் கோதுமை மாவு 1 கிலோ பாக்கெட்டுகள் நிறைய இருந்தது. வந்தவர்கள் இஸ்லாமிய சகோதரர்கள்.
எல்லோரும் வாங்க 1 பாக்கெட் மாவு இலவசமாக தருகிறோம் என்று கூவினர்… 1 கிலோதானே என்று கொஞ்சம் வசதியானவர்கள் வந்து க்யூவில் நிற்கவில்லை. ஆனால் பசிகொண்ட ஏழைகள் இரவு நேரம் என்பதால் வாங்கி சென்று வீட்டில் வைத்து நாளைக்கு சாப்பாட்டிற்காக என்று வைத்துவிட்டு உறங்கி விட்டார்கள்.
மறுநாள் காலையில் மாவைப் பிரித்த போது, ஒவ்வொரு பாக்கெட்டுக்குள்ளும் ரூபாய் 15000 (பதினைந்தாயிரம்) இருந்தது. பசித்த ஏழைகளுக்கு ஒரு கிலோ மாவு பெரிசுதானே. இந்த திட்டத்தை செயல் படுத்தியவர் வேறு யாருமில்லை நடிகர்_அமீர்கான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Ajijur Rahman என்பவர் 2020 ஏப்ரல் 26 அன்று பகிர்ந்துள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சில தினங்களுக்கு முன்பு தொழிலதிபர் ஒருவர் ஏழைகளுக்கு உதவ மாவு பாக்கெட்டில் பணம் வைத்துக் கொடுத்தார் என்று வதந்தி பரப்பப்பட்டது. எந்த இடம், யார், எப்போது என எதுவும் குறிப்பிடாமல் இருந்த பதிவுக்கு தற்போது ஒரு அடையாளத்தை கொடுத்துள்ளனர் நெட்டிசன்கள். நடிகர் அமீர் கான் பணத்தைக் கொடுத்தார் என்று சமூக ஊடகங்களில் இந்த தகவல் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
உண்மையில் இந்த சம்பவம் நடந்ததா, அமீர் கான் ஏழைகளுக்கு ரூ.15000த்தை கோதுமை மாவு பாக்கெட்டில் வைத்து கொடுத்தாரா என்று ஆய்வு மேற்கொண்டோம். முதலில் அமீர்கான் பணம் கொடுத்தது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா, தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் ஏதும் தகவல் வெளியிட்டுள்ளாரா என்று பார்த்தோம்.
அவருடைய ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கோதுமை மாவுடன் ரூ.15000 பணம் கொடுத்தது பற்றி அவர் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
அமீர் கான் டெல்லியில் ஏழைகளுக்கு பணம் வழங்கியது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்போது சமூக ஊடகங்களில் பரவும் வதந்தி தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா தொடங்கி பல ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன.
ஐ.ஏ.என்.எஸ் என்ற செய்தி ஊடகம் இந்த வதந்தி தொடர்பாக அமீர்கானை தொடர்புகொண்டு விளக்கம் பெற முயன்றதாகவும், ஆனால் அவர் தரப்பில் யாரும் பேசவில்லை என்றும் குறிப்பிட்ட செய்தியை எல்லா முன்னணி ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.
இந்த நேரத்தில் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ மலையாளம் பிரிவு இது தொடர்பாக செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் தொழிலதிபர் ஒருவர் கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்து ஏழைகளுக்கு வழங்கியதாக வதந்தி பரவியதாக ஒரு செய்தியை வெளியிட்டிருந்தனர். இது தொடர்பாக சூரத் நகர போலீசாரிடம் விசாரித்துள்ளனர்.
அதற்கு அவர்கள் “சமூக ஊடகங்கள், வாட்ஸ் ஆப்பில் இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது. ஆனால், சூரத் நகரில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக எந்த ஒரு தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை. மாவு பாக்கெட்டில் ரூ.15 ஆயிரம் பணம் கிடைத்ததாக யாரும் கூறவில்லை” என்று கூறியதாக அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தனர். இதற்குப் பிறகே அமீர்கான் மாவு பாக்கெட்டில் பணத்தை வைத்து வழங்கியதாக பகிரப்பட்டு வருகிறது.
2020 மே 4ம் தேதி வெளியான மறுப்பு…
வதந்திகள் வைரலாக பரவி வரும் நிலையில் மே 4ம் தேதி அமீர்கான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “நண்பர்களே, கோதுமை மாவு பாக்கெட்டில் பணத்தைப் போட்டுக் கொடுத்தது நான் இல்லை. இது முழுக்க போலியான கதையாக இருக்கலாம் அல்லது தான் யார் என்ற உண்மை வெளியே தெரியக்கூடாது என்று நினைக்கும் ராபின்உட்டாக இருக்கலாம். பாதுகாப்பாக இருங்கள், அன்புடன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நம்முடைய ஆய்வில்,
டெல்லியில் நடிகர் அமீர் கான் கோதுமை மாவு மற்றும் பணம் வழங்கியது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.
நடிகர் அமீர்கான் நிவாரண உதவி வழங்கியது தொடர்பாக தன்னுடைய சமூக ஊடக பக்கத்திலும் தெரிவிக்கவில்லை.
அமீர்கான் வதந்திக்கு முன்னதாக குஜராத்தில் இதேபோல் வதந்தி பரவியுள்ளது. அங்கும் கோதுமை மாவு, பணம் பெற்றதாக ஒருவர் கூட கூறவில்லை.
பணத்தை கோதுமை மாவு பாக்கெட்டில் போட்டு கொடுத்தது நான் இல்லை என்று அமீர் கான் விளக்கம் அளித்துள்ளார்.
அமீர்கான் கோதுமை மாவுடன் ரூ.15000 பணத்தை வைத்துக் கொடுத்தார் என்று பகிரப்படும் தகவல் வெறும் வதந்தி என்று அமீர் கான் தெளிவுபடுத்தியுள்ளார். இதன் அடிப்படையில் கோதுமை மாவு பாக்கெட்டில் ரூ.15 ஆயிரம் பணத்தைப் போட்டுக் கொடுத்தார் அமீர் கான் என்று பகிரப்படும் சமூக ஊடக பதிவுகள் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கோதுமை மாவு பாக்கெட்டில் பணம் வைத்துக் கொடுத்தாரா அமீர்கான்?
Fact Check By: Chendur PandianResult: False
