ராமநாத சுவாமி கோயிலில் 1212 தூண்கள் ஒரே புள்ளியில் சந்திக்கிறதா?

ஆன்மீகம்

‘’1212 தூண்கள் ஒரே புள்ளியில் சந்திக்கும் ராமநாத சுவாமி கோயில் அதிசயம்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link I Archived Link

Abdul Rahaman என்பவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார். இதில், கோயில் போன்ற புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மேலே, 1740 ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் கட்டியது, என எழுதியுள்ளார். அந்த புகைப்படத்தின் உள்ளே, ‘’ஒரு புள்ளியில் முடியும் 1212 தூண்கள்.. இராமநாத சுவாமி கோயில். 1740 வருடத்திய இன்ஜினியர்கள்.. Legend’s,’’ என எழுதப்பட்டுள்ளது. இதனை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
இவர்கள் சொல்வது போல, இந்த தூண்கள் வடிவமைப்பு ராமநாத சுவாமி கோயிலில்தான் உள்ளதா என்ற சந்தேகத்தில், அடிக்கடி ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக பயணம் சென்றுவரும் நண்பர் ஒருவரிடம் கேட்டோம். அதற்கு அவர், ‘’ராமநாத சுவாமி கோயிலில் இத்தகைய வேலைப்பாடு ஒன்று உள்ளது. ஆனால், அது இதுபோல ஒரே நேராக இருக்காது. அது சற்று வண்ண அலங்காரங்களுடன் வித்தியாசமான தூண் அமைப்பாக, வளைந்து நெளிந்து இருக்கும்,’’ என தெரிவித்தார்.

இதையடுத்து, கூகுள் சென்று ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பற்றிய புகைப்பட ஆதாரங்களை தேடினோம். அப்போது, அங்குள்ள தூண் வேலைப்பாடுகள் தொடர்பான புகைப்படம் கிடைத்தது. அதனை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

இதை வைத்துப் பார்த்தால், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் வேறு மாதிரி உள்ளது தெளிவாகிறது. இது மட்டுமின்றி, இந்த புகைப்படத்தின் விவரம் பற்றி தேடுகையில், இதுபற்றி ஏற்கனவே smhoaxslayer என்ற இணையதளம் உண்மை கண்டறியும் சோதனை செய்து, முடிவுகளை சமர்ப்பித்துள்ள தகவலும் தெரியவந்தது. அதனை படிக்க இங்கே கிளிக் செய்யவும். 

இதன்படி, மத்திய பிரதேச மாநிலம், மாண்டூ பகுதியில் உள்ள ஹோசங் ஷா கல்லறையில்தான் இத்தகைய கட்டமைப்பு உள்ளதாக, தெரியவருகிறது. அதுவும் அந்த இடத்தில் 81 தூண்கள் மட்டுமே உள்ளன. அதனை மார்ஃபிங் செய்து, 1212 தூண்கள் உள்ளதுபோல தவறாகச் சித்தரித்துள்ளனர் என்ற விவரமும் தெரியவருகிறது. அந்த கல்லறை புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும். 

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு செய்த ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள புகைப்படம் ராமநாத சுவாமி கோயில் கிடையாது என்றும், இது மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஹோசங் ஷா கல்லறை புகைப்படத்தை எடுத்து மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படம் தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை உறுதிப்படுத்தாமல் மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:ராமநாத சுவாமி கோயிலில் 1212 தூண்கள் ஒரே புள்ளியில் சந்திக்கிறதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False