
ஜோசப் விஜய் முதல்வரான நிலையில் மக்கள் பாதுகாப்புக்காக 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடும் சேவை தொடங்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சேலத்தில், இருசக்கர மோட்டார் வாகனங்களில் காவலர்கள் கண்காணிப்பில் ஈடுபடும் சேவை தொடக்க நிகழ்வின் வீடியோ ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “CM விஜய் தலைமையில் ஆன tn போலீஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, குறிப்பாக பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று பிரசாரம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, முதல்வராக விஜய் புதிதாக பொறுப்பேற்ற பிறகு சட்டம் ஒழுங்கை சரி செய்யும் வகையில் ’24 மணி நேர ரோந்து பணியில் ஈடுபடும் சேவை தொடங்கப்பட்டது’ என்று பாலிமர் டிவி வெளியிட்ட வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோவில் ‘பாலிமர் நியூஸ்’ தொலைக்காட்சியின் லோகோ இருந்ததால் அதன் சமூக ஊடக பக்கங்களை பார்வையிட்டோம். விஜய் பொறுப்பேற்ற மே 10ம் தேதிக்குப் பிறகு இப்படி ஒரு வீடியோவை பாலிமர் செய்திகள் வெளியிடவில்லை என்பது தெரிந்தது. எனவே, அதற்கு முன்பாக இந்த வீடியோ வெளியாகி உள்ளதா என்று அறிய ஆய்வைத் தொடர்ந்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2026 ஜனவரி 25ம் தேதி இந்த வீடியோவை பாலிமர் நியூஸ் வெளியிட்டிருந்தது தெரியவந்தது. அதாவது, கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டிருந்தது. தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டத்தை விஜய் ஆட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சேவை என்று தவறாக வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் உறுதியானது. இந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தமிழகத்தில் தி.மு.க ஆட்சி இருந்த போது கடந்த 2026 ஜனவரி மாதம் சேலத்தில் தொடங்கப்பட்ட 24 மணி நேர இருசக்கர வாகன காவலர் ரோந்து திட்டத்தை விஜய் முதல்வரான பிறகு தொடங்கப்பட்டதாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


