
தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்த நிலையில் விஜய் ஆட்சியில் அரசு பேருந்துகளில் விடியல் பயணம் என்ற கட்டணமில்லா போக்குவரத்து பயணம் மேற்கொண்ட பெண்களை ஒரு கி.மீ நடந்து செல்லும்படி ஓட்டுநர் நடு வழியில் இறக்கிவிட்டார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி வெளியிட்ட வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில் மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்ட பெண்களை அவமரியாதை செய்து ஒரு கி.மீ தூரம் நடந்து செல்லும் வழியில் பாதியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் என்று செய்தி இருந்தது. நிலைத் தகவலில், “Actor Vijay க்கும், TVK க்கு வாக்களித்து, மாற்றம் வேண்டும் என்றவர்கள் மட்டும் இத பாருங்க..
அருமையான மாற்றம்.. கட்டணமில்லா விடியல் பயணம் #ஸ்வாகா…” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் நிறுத்தப்படும் என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில், இலவச பஸ் பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் பேருந்தில் பயணித்த பெண்களை, நடு வழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர் என்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

பாலிமர் செய்திகள் சமூக ஊடக பக்கங்களை முதலில் பார்வையிட்டோம். அதில், சமீபத்தில் இந்த வீடியோ வெளியாகவில்லை என்பது தெரியவந்தது. எனவே, பழைய வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வைத் தொடர்ந்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2026 பிப்ரவரி 16ம் தேதி இந்த செய்தியை பாலிமர் நியூஸ் வெளியிட்டிருந்தது தெரிந்தது. பிப்ரவரி 16 என்பது தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியிலிருந்த காலகட்டமாகும். மார்ச் 15, 2026 அன்று தான் தேர்தல் அறிவிப்பே வெளியானது. எனவே, இதற்கும் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசுக்கும் தொடர்பில்லை என்பது உறுதியாகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு கடந்த தி.மு.க ஆட்சியின் போது பேருந்தில் இருந்து பெண்கள் இறக்கிவிடப்பட்ட சம்பவத்தின் வீடியோவை விஜய் ஆட்சியில் பெண்களுக்கு பாதிப்பு என்பது போல தவறாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தவெக ஆட்சியில் மகளிர் விடியல் இலவச பயண திட்டத்தின் கீழ் பயணித்த பெண்களை நடு வழியில் இறக்கிவிட்ட அரசு பஸ் ஓட்டுநர் என்று பரவும் வீடியோ கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடந்தது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


