
மேற்கு வங்கத்தில் வெற்றி பெற்ற பிறகு பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் மசூதி ஒன்றுக்குள் நுழைந்து இசைக் கருவிகளை இசைத்து தொழுகை செய்தவர்களைத் தொந்தரவு செய்தார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இஸ்லாமியர் ஒருவர் தொழுகை செய்யும் போது அவருக்கு பின்னால் சிலர் இசைக் கருவிகளை இசைக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதோ ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் இந்துத்துவா மதவாத சக்திகள் தங்கள் வேலையை வங்காளத்தில் ஆரம்பித்துவிட்டார்கள்….!! தேர்தலுக்குப் பிறகு கொல்கத்தா மசூதியில் தொழுகை நேரத்தில் மக்கள் அமைதியான முறையில் தொழும் காட்சி…!! இந்துதுவா சங்கிகள் பிறரின் வழிபாட்டு தளத்திற்குள் அத்துமீறி. நுழைந்து மேள தாள இசை வாத்தியங்களை இசைத்து அட்டூழியம் செய்வது. அருவறுக்கதக்கது…!! முன்பு மசூதிக்கு வெளியே அநியாயம் செய்தனர்..இப்போ மசூதிக்குள்..!! இந்துதுவாவினரின் இந்தியா உண்மையிலேயே ஒரு நாகரிகமற்ற நாடு.. ட்ரம்ப் சொன்ன நரக்க குழி இதுதான்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் இஸ்லாமியர்களை துன்புறுத்தத் தொடங்கிவிட்டனர் என்று சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகிறது. அப்படி மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது பாஜக-வினர் இசைக் கருவிகளை இசைத்து தொந்தரவு செய்தார்கள் என்று பலரும் வீடியோ ஒன்றை பதிவிட்டு வருகின்றனர். இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோ 2025ம் ஆண்டு ஜூன் மாதமே யூடியூபில் பதிவிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. எனவே, இது மேற்கு வங்க தேர்தல் முடிவுக்குப் பிறகு நடந்த சம்பவம் இல்லை என்பது தெளிவானது.

நம்முடைய ஆய்வில் நமக்கு கிடைத்த வீடியோவில் இந்த சம்பவம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், இதே போன்று அந்த இஸ்லாமிய வழிபாட்டுத்தளத்தில் இசைக் கருவிகளை இசைக்கும் வேறு சில வீடியோக்கள் வெளியிடப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் வங்க மொழியிலிருந்த பதிவை மொழிபெயர்த்துப் பார்த்த போது “காஷி ஷாஹி தர்பார் ஷரீஃப்” பாடல் என்று வந்தது.
இதன் அடிப்படையில் தேடிய போது இஸ்லாமிய வழிபாட்டுத்தளத்தில் பலரும் பாடல்கள் பாடி வழிபாடு நடத்துவது தொடர்பான பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. தொடர்ந்து கூகுளில் தேடிய போது வங்கதேசத்தின் சிட்டகாங் அருகே இந்த தர்கா இருப்பது தெரியவந்தது. நமக்கு கிடைத்த வேறு சில வீடியோக்களில் இருந்த கட்டிடமும் கூகுள் மேப் புகைப்படத்திலிருந்த கட்டிடமும் ஒன்றாக இருந்தது. இதன் மூலம் இந்த வீடியோ வங்கதேசத்தைச் சார்ந்தது என்பதும் தெளிவானது.

தொடர்ந்து தேடிய போது இந்த வீடியோ சிட்டகாங்கில் உள்ள ஒரு வழிபாட்டுத்தளத்திற்கு உள்ளே எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு வெளியான சமூக ஊடக பதிவுகளும் நமக்கு கிடைத்தன. மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு ஒரு ஆண்டுக்கு முன்பே இந்த வீடியோ வெளியாகி இருப்பதாலும், வங்கதேசத்தில் இந்த வழிபாட்டுத்தளம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
வங்கதேசத்தில் உள்ள ஒரு தர்காவில் இசைக் கருவிகள் இசைத்து வழிபாடு நடத்திய நிகழ்வின் வீடியோவை எடுத்து மேற்கு வங்கத்தில் தேர்தலில் வெற்றி பெற்றதால் இஸ்லாமியர்கள் தொழுகை செய்த போது தொந்தரவு செய்த பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


