
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உள்ள இஸ்லாமியர்கள் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டதாக கட்டுப்போட்டு ஏமாற்றி கலவரம் உண்டாக்க முயன்று மாட்டிக்கொண்ட பாஜக நிர்வாகி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தலையில் கட்டுப்போட்டு பேட்டி அளித்த பெண்ணின் தலையில் இருந்த கட்டை ஒருவர் கழற்ற அவருக்கு காயம் ஏதும் இல்லாமல் இருக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “மேற்கு வங்கத்தில் மதக் கலவரத்தை நடத்த பாஜக.
பெண்ணுக்கு தலையில் கட்டுப்போட்டு விட்டு ; மம்தா கட்சியை சேர்ந்த இஸ்லாமிய ஆதரவாளர்கள் தாக்கியதாக நடித்ததை கண்டுபிடித்த மக்கள்…
கையில் ‘இஸ்மாயில்’ என்று பச்சைக் குத்திக்கொண்டு காந்தி மகானை சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ். நாதுராம் கோட்சே பார்ப்பனன் ; பாஜக. சங்கிகளுக்கு மாறுவேடம் குறித்து அன்றே கற்றுக்கொடுத்து சென்று விட்டான்…
இன்னும் என்னென்ன நடக்குமோ… அமித்ஷா – மோடி கம்பெனிக்கு வெளிச்சம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து அங்கு பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருவதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் பாஜக நிர்வாகி ஒருவர் மம்தா கட்சியைச் சார்ந்த இஸ்லாமியர்கள் தாக்கியதாக நாடகமாடி மாட்டிக்கொண்டார் என்று ஒரு வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது பீகார் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நோயாளியின் குடும்பத்தினருக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக வெளியாகி இருந்த வீடியோவில் இந்த பெண்மணி இருந்ததை காண முடிந்தது. தொடர்ந்து தேடிய போது இந்த வீடியோ 2026 ஏப்ரல் 28ம் தேதி சமூக ஊடகங்களில் வெளியாகி இருந்ததை காண முடிந்தது. அதாவது தேர்தல் முடிவுக்கு முன்னரே இந்த வீடியோ வெளியாகி இருந்தது.
நமக்கு கிடைத்த செய்திகளில், பீகார் மாநிலம் முசாஃபர்பூரில் உள்ள ஶ்ரீகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளியின் உறவினருக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் மோதல் ஏற்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து மருத்துவமனையில் ஏ கிரேடு ஸ்டாஃப் நர்சாக பணியாற்றி வரும் அக்லாக்கூர் ரஹ்மான் என்பவர் பேட்டி அளித்திருந்தார். அவருக்கு பின்புறம் இந்த பெண்மணி இருக்கும் வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியதில் மருத்துவமனை ஊழியர்களுக்கு ஏற்பட்டதாக அவர் பேட்டி அளித்திருந்தார்.
அப்போது ஒருவர் அந்த பெண்மணியின் தலை கட்டை பிடித்து இழுக்க, அவருக்கு காயம் ஏதும் இல்லை என்பது தெரிய வருகிறது. இந்த வீடியோவை Maurya Dhwaj Express என்ற ஊடகத்தின் செய்தியாளர் பிரேம் சங்கர் என்பவர் எடுத்ததாக சில பதிவுகள் நமக்கு கிடைத்தன. நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ குழு சார்பில் அவரை தொடர்புகொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவரை தொடர்புகொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் செய்தியாளர் பிரேம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோ மேற்கு வங்கத்தை சார்ந்தது இல்லை, பீகாரில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்து பதிவிட்டிருந்ததையும் கண்டறிந்தோம்.
பீகார் மாநிலத்தின் இந்த வீடியோவை எடுத்து, மேற்கு வங்கத்தில் பாஜக-வினர் நாடகம் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பியிருப்பது இதன் மூலம் தெளிவாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மேற்கு வங்கத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் இஸ்லாமியர்கள் தாக்கியது போன்று நடித்து மாட்டிக்கொண்ட பாஜக பெண் என்று பரவும் வீடியோ பீகாரைச் சார்ந்தது என்பதும் மருத்துவமனையில் ஏற்பட்ட மோதலின் போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது என்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


