
‘’கோமதி மாரிமுத்து கிழிந்த ஷூவுடன் ஓடியதை கேள்விப்பட்ட கனடா பிரதமர் வேதனை‘’, என்ற தலைப்பில் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. நியூஸ் 18 தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு போலவே, அச்சு அசலாக வெளியிடப்பட்டுள்ள இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
#அதிகம்_பகிரவும்
இந்தா வந்துட்டான்டா என் தலைவேன்… ????
தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒரே ஒப்பற்ற தலைவன்… நீங்க நல்லா இருக்கணும்… ???
ரிடயர்டு ரவுடி 3.0 என்ற ஃபேஸ்புக் குழு, இந்த பதிவை ஏப்ரல் 29ம் தேதியன்று வெளியிட்டுள்ளது. கனடா பிரதமரின் புகைப்படத்தை பகிர்ந்து, அதன் மீது, ‘’அதிகம் பகிரவும், இந்தா வந்துட்டான்டா என் தலைவேன், தமிழர்களுக்காக குரல் கொடுக்கும் ஒப்பற்ற தலைவன், நீங்க நல்லா இருக்கனும்,’’ என்று கூறி, அதன் கீழே, ‘கனடா பிரதமர் வேதனை. கோமதி கிழிந்த ஷூவுடன் ஓடியதை கேள்விப்பட்ட கனடா பிரதமர் வேதனை. கனடா அரசின் சார்பாக கோமதிக்கு ஒரு டஜன் ஷூ அனுப்பி வைக்கப்படும் – கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ‘, என்றும் எழுதியுள்ளனர்.
உண்மை அறிவோம்:
கோமதி மாரிமுத்து கிழிந்து ஷூ அணிந்து, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஓடி தங்கம் வென்றதை தொடர்ந்து, பலவித வதந்திகள், நாள்தோறும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இதுபற்றி நாம் ஏற்கனவே விரிவாக உண்மை கண்டறியும் சோதனை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டிருக்கிறோம். அந்த செய்திகளை படிக்க இங்கே 1 மற்றும் இங்கே 2 கிளிக் செய்யவும்.
கோமதி மாரிமுத்து விவகாரத்தில், தமிழ் உணர்வு மிக்கவர்கள் அதிகளவில் உணர்ச்சி வசப்பட்டு கருத்து தெரிவித்து வந்த நிலையில், அவர்களை கிண்டல் செய்யும் விதமாக, மேற்கண்ட கனடா பிரதமர் நியூஸ் கார்டு தயாரித்து, வெளியிடப்பட்டுள்ளது.
இதனை பதிவிட்ட நபரே, கமெண்ட் பிரிவில், தமிழனா இருந்தால் அதிகம் ஷேர் செய்யவும், என எழுதியுள்ளார். இதன்மூலமாக, விஷமத்தனமாக, இத்தகைய சித்தரிக்கப்பட்ட பதிவை அவர் வெளியிட்டதை அறிய முடிகிறது. இதுதவிர, அந்த நபரின் பெயரே, நியூஸ் 18 தொலைக்காட்சியின் பெயருக்குப் பதிலாக குறிப்பிட்ட நியூஸ் கார்டில் இடம்பெற்றுள்ளது. Retired Rowdy என்ற பெயரில், நியூஸ் 18 எந்த இடத்திலும் நியூஸ் கார்டு வெளியிட்டிருக்க முடியாது. இதுதவிர, ரிடயர்டு ரவுடியின் நியூஸ் கார்டில் ஏகப்பட்ட வாக்கிய பிழைகள். ஒரு முன்னணி செய்தித் தொலைக்காட்சி இப்படி தவறுகளுடன் நியூஸ் கார்டு வெளியிட வாய்ப்பே இல்லை.

இதையடுத்து, நியூஸ் 18 தொலைக்காட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம் சென்று, இத்தகைய நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதா, என தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஆதாரமும் சிக்கவில்லை.

நியூஸ் 18 தொலைக்காட்சி இத்தகைய நியூஸ் கார்டு எதையும் வெளியிடாத நிலையில், மீம் தயாரிப்பு வசதிகளை பயன்படுத்தி, குறிப்பிட்ட நபரே இப்படியான ஒரு போலி நியூஸ் கார்டை தயாரித்திருப்பதாக, தெளிவாகிறது.
தமிழ் உணர்வு உள்ளவர்கள், சிலவற்றை அதிகளவில் ஷேர் செய், எனக் கூறி, சமூக ஊடகங்களில் எதையேனும் பகிர்வது வழக்கம். அதனை கிண்டல் செய்கிறேன் பேர்வழி என, எதிர் அரசியல் கருத்து உள்ளவர்கள், அப்படியே உல்டா செய்வது வழக்கம். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒருமுறை, பொங்கல் பண்டிகையை, தமிழர்களுடன் இணைந்து கொண்டாடினார். இதுபற்றி பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
அன்று முதலாக, தமிழகம் சார்ந்த எந்த பிரச்னையாக இருந்தாலும், உடனே கனடா பிரதமர் அறிக்கை வெளியிட்டதுபோல, ஒரே மீம் டெம்பிளேட்டை பயன்படுத்தி, நியூஸ் கார்டு வெளியிடுவதை, பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சர்கார் பட பிரச்னையின்போதும், கஜா புயல் பாதிப்பின்போதும், கனடா பிரதமர் பெயரில் ஷேர் செய்யப்பட்ட போலி நியூஸ் கார்டு ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

இதன்படி, பல மாதங்களாக, ஒரே மீம் டெம்பிளேட்டை பயன்படுத்தி, இவர்கள் கனடா பிரதமர் பெயரில் போலி நியூஸ் கார்டு தயாரித்து, வெளியிடுவது உறுதி செய்யப்படுகிறது. இதுபோலவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும், தவறான நியூஸ் கார்டை பகிர்ந்துள்ளது மீண்டும் ஒருமுறை தெளிவாகிறது.
குறிப்பிட்ட நபரின் ஃபேஸ்புக் பக்கம் சென்று பார்த்தால், வெளிப்படையாக, திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆதரவாளராக உள்ளதைக் காண முடிகிறது. கவர் புகைப்படம் முதல், ரிடயர்டு ரவுடி வெளியிடும் அனைத்து பதிவுகளும் திமுக சார்பாகவே உள்ளன. சுய அரசியல் லாபத்திற்காக, இவர் இத்தகைய பதிவை வெளியிட்டதும் சந்தேகமின்றி தெரியவருகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, கனடா பிரதமர் தொடர்பான மேற்கண்ட நியூஸ் கார்டு தவறான ஒன்று என நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Title:கோமதி மாரிமுத்துவிற்கு ஒரு டஜன் ஷூ அனுப்பி வைக்கப்படும்: கனடா பிரதமர் பற்றி வதந்தி
Fact Check By: Parthiban SResult: False
