திருமாவளவனை தரையில் அமர வைத்தாரா மு.க.ஸ்டாலின்?- அதிர்ச்சி தந்த ஃபேஸ்புக் பதிவு

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

திருமாவளவனை மட்டும் மு.க.ஸ்டாலின் தரையில் அமரவைத்தார் என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம். 

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மேற்கண்ட பதிவில் இடம்பெற்றுள்ள புகைப்படத்தில், மு.க.ஸ்டாலின், நடிகர் கமல், டி.ஆர்.பாலு, துரைமுருகன் ஆகியோர் சோஃபாவில் அமர்ந்துள்ளனர். ஆனால், தொல் திருமாவளவன் மட்டும் தரையில் அமர்ந்திருப்பது போல உள்ளது. 

நிலைத் தகவலில், “தலித் என்ற காரனத்தால் திருமாவை இருக்கையில் அமர வைக்காமல் தரையில் அமர வைத்து அவமானபடுத்திய ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிரோம் இந்த தகவல் அனைவருக்கும் போய் சேரும் வரை பகிருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த பதிவை, Kodees Waran என்பவர் 2020 மார்ச் 5ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தொல் திருமாவளவனை அவரது சாதி காரணமாக தரையில் அமர வைத்ததாக, விஷமத்தனமான கருத்தைப் பகிர்ந்துள்ளனர். படம் உண்மையானது போல் இருக்க வேண்டும் என்பதற்காக, தெளிவின்றி காட்டப்பட்டுள்ளது.

திருமாவளவன் படத்தை மட்டும் தனியாக சேர்த்தது போல உள்ளது. எனவே, இது போட்டோஷாப் செய்யப்பட்ட படம் என்பதை உறுதி செய்வதற்கான ஆதாரங்களைத் தேடினோம்.

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த படம் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. டிடி நெக்ஸ்ட் வெளியிட்டிருந்த செய்தியில், கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டபோது அவரது வீட்டுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல் வந்து உடல் நலம் விசாரித்தபோது எடுக்கப்பட்டது என்று பல செய்திகள் நமக்கு கிடைத்தன.

அந்த படங்களில் திருமாவளவன் தரையில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இல்லை. ஆனால் அதே செய்தியில் தொல் திருமாவளவனும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தார் என்று இருந்தது.

dtnext.inArchived Link 1
thequint.comArchived Link 2

இண்டியன் எக்ஸ்பிரஸ் தமிழ் 2018 ஜூலை 27ம் தேதி வெளியிட்டிருந்த செய்தியில், கருணாநிதி உடல் நலம் குறித்து தமிழக அமைச்சர்கள், நடிகர் கமல், தொல் திருமாவளவன் உள்ளிட்டோர் விசாரித்தனர் என்று செய்தி மற்றும் படம் வெளியிட்டிருந்தனர். தொல் திருமாவளவன் மு.க.ஸ்டாலினுக்கு சரி சமமாக சோஃபாவில் அமர்ந்திருக்கும் படமும் நமக்கு கிடைத்தது.

tamil.indianexpress.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

நடிகர் கமல் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அசல் படம் கிடைத்துள்ளது.

தொல் திருமாவளவன் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க வந்தபோது எடுக்கப்பட்ட அசல் படம் கிடைத்துள்ளது.

இதன் மூலம் திருமாவளவன் தரையில் அமர்ந்திருக்கும் பழைய படத்தை எடுத்து, மு.க.ஸ்டாலின் கமல் சந்திப்பு படத்துடன் சேர்த்து விஷமத்தனமாக பதிவிட்டிருப்பது உறுதி செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், திருமாவளவனை அவரது சாதி காரணமாக மு.க.ஸ்டாலின் தரையில் அமரவைத்தார் என்று பரப்பப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:திருமாவளவனை தரையில் அமர வைத்தாரா மு.க.ஸ்டாலின்?- அதிர்ச்சி தந்த ஃபேஸ்புக் பதிவு

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •