திமுக.,விற்கு ட்விட்டர் நிறுவனம் பணம் கொடுத்ததாக பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம்
C:\Users\parthiban\Desktop\twitter 1.png

‘’திமுகவுக்கு பணம் கொடுத்ததாக டிவிட்டர் நிறுவனம் ஒப்புதல்,’’ என்ற தலைப்பில் ஃபேஸ்புக் செய்தி ஒன்றை காண நேரிட்டது. இது உண்மையா என்ற சந்தேகம் எழுந்தது. இதன்பேரில், உண்மை கண்டறியும் சோதனை நடத்த தீர்மானித்தோம். அதில் கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

தகவலின் விவரம்:

Archived Link

கடந்த ஏப்ரல் 13ம் தேதியன்று இந்த பதிவை வெளியிட்டுள்ளனர். அதில், நியூஸ்7 தொலைக்காட்சி வெளியிட்ட நியூஸ் கார்டு போல ஒன்றை பகிர்ந்து, ‘GoBackModi என்ற பெயரில் பதிவு போடுவதற்காக, திமுக.,வினருக்கு ட்விட்டர் நிறுவனம் ரூ.2 கோடியே 20 லட்சம் பணம் வழங்கியதாக ஒப்புக் கொண்டுள்ளது,’ எனக் கூறியுள்ளனர். இதனை உண்மையா, பொய்யா எனத் தெரியாமல் ஆயிரக்கணக்கானோர் ஷேர் செய்துள்ளனர்.

உண்மை அறிவோம்:
பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம், அவருக்கு எதிராக #GoBackModi என்ற ஹேஸ்டேக் பிரபலப்படுத்தப்படும். ட்விட்டர், ஃபேஸ்புக் என எங்கு சென்றாலும், பலர் இவ்வாறு போஸ்ட் போடுவார்கள். இது முதன்முதலாக, கடந்த ஏப்ரல் 12, 2018 அன்றுதான் அரங்கேறியது. அந்த செய்தி ஆதாரம் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு இதுவே வாடிக்கையாக மாறிவிட்டது. கோபேக்மோடி சொல்லும் பல பேர் திராவிடர் கழகம், திமுக, மே 17 இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். குறிப்பாக, தமிழர்கள்தான் இத்தகைய பதிவுகளை சமூக ஊடகங்களில் அதிகம் பகிர்வார்கள். இதுதவிர, அரசியல் கட்சியினர் பிரதமர் மோடி வரும் பகுதிகளுக்கு அருகே போராட்டம் நடத்துவதும் உண்டு. இதன்போது வட இந்தியர்களும், தமிழக பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் கண்டனம் தெரிவிப்பதும் வழக்கம்தான். ஆனால், இதை திமுக மட்டுமே செய்கிறது என, பாஜக.,வினர் குற்றம்சாட்டுவது ஏற்புடையதல்ல. பல்வேறு கட்சிகளும் இத்தகைய செயலை செய்கின்றனர்.

இது மட்டுமின்றி, மோடியை கிண்டல் செய்து பலவித மீம்ஸ்களும் ட்விட்டரில் பகிரப்பட்டு, உலக அளவில் இந்த ஹேஸ்டேக் பிரபலப்படுத்தப்படும். எனவே, இதுபற்றி ட்விட்டர் நிறுவனத்திடமே மத்திய அரசு முறையீடு செய்ததாக, தகவல் கூறப்படுவது உண்டு. இதுபற்றிய செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

தமிழகத்தில் இப்படி கோபேக்மோடி சொல்வதைப் பார்த்து, தற்போது ஆந்திரா, அசாம் போன்ற மாநிலங்களிலும், கோபேக்மோடி என்ற பெயரில் போராட்டம் செய்வது டிரெண்டாகி உள்ளது. இதுபற்றிய செய்திகளை படிக்க இங்கே 1 இங்கே 2 கிளிக் செய்யவும்.     

ஆனால், கோபேக்மோடி பதிவு போடுவதற்காக, திமுக.,வினருக்கு மட்டும் ட்விட்டர் நிறுவனம், ரூ.2கோடியே 20 லட்சம் பணம் கொடுத்ததாக, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் கூறப்பட்டுள்ளது. அப்படி எங்கேயும் நடக்கவில்லை.

ஒருவேளை, இப்படி ஏதேனும் செய்தி நிகழ்ந்ததா என கூகுளில் தேடி பார்த்தோம். அப்போது, இதுதொடர்பாக, AltNews ஏற்கனவே உண்மை கண்டறியும் சோதனை நடத்தியுள்ளதை காண முடிந்தது. அதாவது, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவு, கடந்த 2018, மே 2ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஒன்றாகும். இதனை முதலில், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அப்போதே, இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வலு சேர்ப்பது போல, மற்றொரு பாஜக பிரமுகர் ராஜீவ் சந்திரசேகரும் ஒரு ட்விட் வெளியிட்டிருக்கிறார். அதை வைத்துத்தான், கோபேக்மோடி டிரெண்டிங் செய்வதற்காக, திமுக.,வினருக்கு ட்விட்டர் நிறுவனம் பணம் கொடுத்தது என்று, வதந்தி பரவ தொடங்கியுள்ளதாக, தெரியவருகிறது.

இதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவும், கடந்த 2018, மே 12ம் தேதியன்று ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி வெளியிட்ட நியூஸ்கார்டு பதிவும் ஒன்றுதான் எனவும் உறுதி செய்யப்பட்டது. இந்த நியூஸ்கார்டுக்கு, அப்போதே நியூஸ்7 சேனல் விளக்கம் அளித்து, இது போலியான நியூஸ்கார்டு என விளக்கம் அளித்துவிட்டது.

எனவே, அதன் பெயரிலேயே, தற்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட நியூஸ்கார்டும் தவறான ஒன்று, என உறுதி செய்யப்படுகிறது. இந்த சர்ச்சையை தொடர்ந்து, ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பதிவை அளித்துவிட்டார். ஆனாலும், அந்த நியூஸ்கார்டு இன்னமும் வைரலாகித்தான் வருகிறது என்பதற்கு, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவே உதாரணமாகும்.

முடிவு:
உரிய ஆதாரங்களுடன் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவு, தவறான ஒன்று என உறுதி செய்யப்படுகிறது. நமது வாசகர்கள் யாரும் இத்தகைய தவறான, நம்பகத்தன்மை இல்லாத செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவற்றை மற்றவர்களுக்கு பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அப்படி நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் அளித்தால் உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Avatar

Title:திமுக.,விற்கு ட்விட்டர் நிறுவனம் பணம் கொடுத்ததாக பரவும் வதந்தி!

Fact Check By: Parthiban S 

Result: False