
காஷ்மீரில் நிகழும் வன்முறைகளின் தொகுப்பு போல சில புகைப்படங்களை ஒன்று சேர்த்து கொலாஜ் வடிவில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இவற்றின் நம்பத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
எங்கும் ரத்த வெள்ளமாகக் காணப்படும் புகைப்படம், சாலையில் கொட்டிக்கிடக்கும் ரத்தத்தைத் துடைக்க சணல் பையைக் கொண்டு வரும் காவலர், தாக்குதலால் முகத்தில் காயம் பட்ட சிறுவன், அழும் தாயைப் பார்க்கும் சிறுவன் என நான்கு படங்களை ஒன்று சேர்த்து ஒரே படமாக பகிர்ந்துள்ளனர்.
நிலைத் தகவலில், “தயவுசெய்து காஷ்மீர் மக்களை விட்டு விடுங்கள். அகண்ட பாரதத்தை விட அமைதியான இந்தியா மேலானது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, Manibharathi Mani என்பவர் 2019 செப்டம்பர் 22ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த படம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது என்று படத்திலோ, நிலைத் தகவலிலோ நேரடியாக குறிப்பிடவில்லை. ஆனால், “காஷ்மீர் மக்களைவிட்டுவிடுங்கள்… அகண்ட பாரதத்தை விட அமைதியான இந்தியா மேலானது” என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம், காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கத்தை தொடர்ந்து அங்கு நடைபெறும் சம்பவம் என்ற வகையில் இந்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது என்பது தெரிகிறது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 270 நீக்கம் என்பது 2019 ஆகஸ்ட் 6ம் தேதி கொண்டுவரப்பட்டது. அதையொட்டி காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் சிறையில், வீட்டுச் சிறையில் உள்ளனர். தொலைத் தொடர்பு முடக்கப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, இவ்வளவு பெரிய சம்பவம் எப்படி நடந்த, யார் இதை வெளியிட்டார்கள் என்ற கேள்வி எழுகிறது.
Dinamani | Archived Link |
அதே நேரத்தில், காஷ்மீரில் நடக்கும் வன்முறைகள், போராட்டங்கள் என்று தொடர்ந்து பழைய, சிரியா உள்ளிட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இது தொடர்பாக அவ்வப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் பிரிவில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த படங்கள் எல்லாம் காஷ்மீரில், சமீபத்தில் எடுக்கப்பட்டதா என்று ஆய்வு மேற்கொண்டோம்.
தெரு முழுக்க ரத்தமாகவும் சடலமாகவும் தெரியும் முதல் படத்தை மட்டும் தனியாக எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த படத்தைப் பற்றி பல உண்மை கண்டறியும் ஆய்வுகள் நடந்திருப்பது நமக்குத் தெரியவந்தது.
அவற்றை எல்லாம் சற்று தள்ளிவைத்துவிட்டு, முதலில் இந்த பதிவை வெளியிட்டது யார், எங்கிருந்து வெளியானது என்று தேடிப்பார்த்தோம். அப்போது, அரபி மொழியில் வெளியான ஒரு ஃபேஸ்புக் பதிவு ஒன்று கிடைத்தது. அந்த பதிவு 2019 ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகி இருந்தது. அரபி மொழியிலிருந்ததை கூகுள் டிரான்ஸ்லேட்டரில் பதிவேற்றி மொழி பெயர்ப்பு செய்து பார்த்தோம். அதில் காஷ்மீர் என்று எங்கும் குறிப்பிடவில்லை. “இந்த காட்சிகளைக் கண்டு கடவுள் மகிழ்ச்சியுறுவாரா, கடவுளை அணுகுவதற்கான வழி இதுதானா” என்று தொடர்ந்து பல கேள்விகள் எழுப்பியிருந்தன.
Reverse Image Search Link | Facebook Link | Archived Link |
அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் பின்னணியை ஆய்வு செய்தோம். எந்த ஊர் என்று குறிப்பிடவில்லை. ஆனால், அரபு, மத்திய கிழக்கு பகுதியைச் சார்ந்தவர்கள் போல பதிவுகள் இருந்தன. அந்த படத்தை பெரிதாக்கிப் பார்த்தோம். அப்போது, படத்தில் இருப்பது மனிதர்கள் இல்லை, கால்நடைகள் கொல்லப்படும்போது எடுக்கப்பட்டது என்று தெரிந்தது. இதன் மூலம் கால்நடைகள் கொல்லப்படும் படத்தை காஷ்மீரில் மனிதர்கள் கொல்லப்படுவதாக பகிரப்பட்டுள்ளது உறுதியானது.
இரண்டாவதாக, தரையில் கொட்டிக்கிடக்கும் ரத்தத்தை காவலர் ஒருவர் சணல் கோணியால் மூட வரும் படத்தைப் பற்றி ஆய்வு மேற்கொண்டோம். இந்திய காவல் துறையினர் போல உள்ளனர். கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் ஒருசிலர் நிற்பது தெரிகிறது. இதனால், தற்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அந்த படத்தை மட்டும் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
Reverse Image Search Link | Article Link | Archived Link |
அப்போது, இது 2016ம் ஆண்டு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. 2016 மே மாதம் நடந்த தாக்குதலுக்கு அப்போது மத்தியப் பிரதேச முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌகான் கண்டனம் தெரிவித்திருந்தார் என்று வெளியான செய்தியில் இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இந்த தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கொல்லப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம், பழைய படத்தை தற்போது பகிர்ந்துள்ளது உறுதியானது.
குழந்தையின் முகத்தில் காயங்களுடன் இருக்கும் புகைப்படத்தை ஆய்வு செய்தோம். அது 2008ம் ஆண்டு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட காஸா பகுதியைச் சேர்ந்த குழந்தை என்பது தெரியவந்தது.
Reverse Image Search Link | Article Link | Archived Link |
நான்காவதாக அழும் தாயின் கண்ணீரைத் துடைக்கும் குழந்தை படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2018ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி டெலிகிராப் இணையதளத்தில் வெளியான செய்தியில் இந்த புகைப்படம் இருந்தது தெரிந்தது.
Reverse Image Search Link | Article Link | Archived Link |
அதில், மூன்று பேர் சீருடையில், ஒருவர் மண்ணுக்கு அடியில் என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தனர். அதில் காலித் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவரது இறுதி ஊர்வலத்தைக் கண்டு அழும் பெண்ணின் கண்ணீரை சிறுவன் துடைப்பதாகவும் குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் பழைய படத்தை தற்போது நடந்தது போல பதிவிட்டது உறுதியானது.
நம்முடைய ஆய்வில்,
வெளிநாட்டில் எங்கேயோ கால்நடைகள் கொல்லப்படும் படத்தை, காஷ்மீரில் மக்கள் கொல்லப்பட்டது போன்று காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
போலீசார் சாக்கு துணியை போடும் படம் 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகத்தில் காயத்துடன் இருக்கும் சிறுவன் புகைப்படம் காஸா பகுதியில் 2008ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாயின் கண்ணீரைத் துடைக்கும் சிறுவன் புகைப்படம் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் காஷ்மீரில் சமீபத்தில் எடுக்கப்பட்டது போல பகிரப்பட்டுள்ள மேற்கண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:காஷ்மீர் வன்முறை என்று பரவும் புகைப்படங்கள் உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
