கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு; உண்மை என்ன?
‘’கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு,’’ என்று கூறி பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி வாசகர்கள் பலரும் சந்தேகம் எழுப்பவே, நாம் ஆய்வு மேற்கொண்டோம்.
தகவலின் விவரம்:
புதுச்சேரி பல்கலையில் படிக்கும் ராமு என்ற மாணவன் கொரோனா வைரஸ் தொற்றை சரிப்படுத்தக்கூடிய மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக, இதில் விரிவாக எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் உள்ள இந்த செய்தி வாட்ஸ்ஆப்பில் நீண்ட நாளாக பகிரப்படுவதால், இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி நமது வாசகர்கள் சிலர் கேட்டுக் கொண்டனர்.
இதன்பேரில், ஃபேஸ்புக்கில் நிறைய பேர் இந்த தகவலை பகிர்வதைக் கண்டோம்.
Facebook Claim Link 1 | Archived Link 1 |
Facebook Claim Link 2 | Archived Link 2 |
Facebook Claim Link 3 | Archived Link 3 |
உண்மை அறிவோம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்றை சமாளிக்க, ஏதேனும் மருந்து அல்லது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படுமா என உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துள்ளனர்.
இத்தகைய சூழலில் ஒவ்வொரு நாளும் கொரோனாவிற்கு தடுப்பூசி, மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறி சிலர் வதந்தி பரப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அப்படி பகிரப்பட்டுள்ள தகவல்தான் மேலே நாம் கண்டதும்…
உண்மையில், இதில் குறிப்பிடுவது போல, ‘’1 தேக்கரண்டி கருமிளகுப் பொடியை எடுத்து, 2 தேக்கரண்டி தேன் மற்றும் இஞ்சி சாறுடன் அதனை கலந்து, தொடர்ச்சியாக 5 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கொரோனா சரியாகிவிடும். இது நல்ல கை வைத்தியம்,’’ என்பது உண்மையா என்று பார்த்தால், முழு உண்மையில்லை.
காரணம், இதுபோன்ற நிறைய பாட்டி வைத்திய குறிப்புகள், சமூக வலைதளங்களில் பகிரப்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான குறிப்புகள் பக்க விளைவுகள் ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன.
உண்மையில், பாட்டி வைத்திய குறிப்புகள், உடலின் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தக்கூடியதாக இருந்தாலும், அவற்றை முழு உண்மை என நம்பிவிட முடியாது.
மேலும், ஒரு பாட்டி வைத்திய குறிப்பை பகிர்ந்து, அதனை பாண்டிச்சேரி பல்கலை மாணவன் கண்டுபிடித்ததாவும், அதற்கு WHO அங்கீகாரம் தந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
உண்மையில், பாட்டி வைத்திய குறிப்புகள் எல்லோருக்குமே தெரியும். வயிற்று வலி வந்தால், சளி பிடித்தால், தலைவலி வந்தால், என ஒவ்வொன்றுக்குமே பெரும்பாலான இந்தியர்கள் பாட்டி வைத்திய முறையில், வீட்டில் உள்ள பொருட்களை வைத்து அவசர சிகிச்சை செய்து கொள்வது வழக்கம்தான். எனினும், இவை எந்த நோய்க்கும் நிரந்தர தீர்வு தராது. நோய் எதிர்ப்புச் சக்தியை மட்டுமே அதிகரிக்க உதவும்.
இதில், குறிப்பிடுவது போல, பாண்டிச்சேரி பல்கலையில் படிக்கும் ராமு என்ற மாணவரின் இந்த அரிய கண்டுபிடிப்பை WHO அங்கீகரித்துள்ளதா என்று பார்த்தால் இல்லை என்பதே பதில். இந்தியா முழுக்க பரவும் இந்த வதந்தி பற்றி TheLogicalIndian இணையதளம் தரப்பில் பாண்டிச்சேரி பல்கலைக்கழக துணை வேந்தரிடம் பேசி விளக்கம் பெற்றுள்ளனர். இப்படி எந்த மாணவரும், தங்கள் தரப்பில் மருந்து கண்டுபிடிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.
இதுதவிர, மிளகு, தேன் உள்ளிட்டவை கொரோனா வைரஸ்க்கு நிரந்தர தீர்வாகாது என்று WHO ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கிறது.
இதுபோன்ற பலவிதமான பாட்டி வைத்திய முறைகள் பற்றியும், கொரோனா வைரஸ் தொற்றை சமாளிக்க அவற்றால் முடியாது என்றும் தெளிவாகக் குறிப்பிட்டு, WHO ஏற்கனவே விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறது.
எனவே, இத்தகைய வதந்திகளை யாரும் உண்மை என நம்ப வேண்டாம்.
இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) தேன், மிளகு, இஞ்சி, உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி செய்யப்படும் பாட்டி வைத்திய முறை எதுவும் கொரோனா வைரஸ்க்கு தீர்வாகாது. அவை வெறும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவும் பொருட்கள் மட்டுமே.
2) இதேபோல, பாண்டிச்சேரி பல்கலை சார்பாக இப்படி எந்த மாணவனும் மருந்து கண்டுபிடிக்கவில்லை; அதனை WHO அங்கீகரிக்கவும் இல்லை.
3) எல்லோருக்கும் தெரிந்த பாட்டி வைத்திய குறிப்பு ஒன்றை பகிர்ந்து, அதனை பாண்டிச்சேரி மாணவன் ராமு கண்டுபிடித்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து என்று வதந்தி பரப்பியுள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு தகவல் தெரிவியுங்கள்.
Title:கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடித்த புதுச்சேரி மாணவன் ராமு; உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False