
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்க உள்ள நிலையில் 2020 ஜூலை 25ம் தேதி ராமாயண காட்சிகள் தபால் தலையை வெளியிட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

ராமாயண காட்சிகள் ஸ்டாம் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இன்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட புனித நூல் ராமாயண ஸ்டாம்ப்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பதிவை Kumar Kumar என்பவர் 2020 ஜூலை 25ம் தேதி பகிர்ந்துள்ளார்.
உண்மை அறிவோம்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ராமாயண காட்சிகள் தொடர்பான தபால் தலையை இந்திய தபால் துறை வெளியிட்டது என்று பகிரப்பட்டு வருகிறது. சமீபத்தில் அப்படி எந்த ஒரு விழாவும் நடந்ததாக இல்லை. எனவே, இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது, இந்த ஸ்டாம்ப் படம் வந்த இந்திய சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருவது தெரிந்தது. இதன் அடிப்படையில் பல உண்மை சரிபார்ப்பு ஊடகங்களும் கட்டுரை வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அவற்றை ஒதுக்கிவிட்டு ஆதாரங்களைத் தேடியபோது, hinduexistence.org என்ற இணையதளத்தில் 2017ம் ஆண்டு இந்த புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், ராமாயண காட்சி தபால் தலைகளை பிரதமர் மோடி வெளியிட்டார் எனக் குறிப்பிட்டு படத்தை வெளியிட்டிருந்தனர். இதன் மூலம் இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தபால் தலை என்பது தெரியவந்தது.
பிரதமர் மோடி இதை வெளியிட்டார் என்று அதில் குறிப்பிட்டிருந்ததால், அது தொடர்பான செய்தி ஏதும் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். தபால்தலை, ராமாயணம், பிரதமர் மோடி உள்ளிட்ட கீ வார்த்தைகளைப் பயன்படுத்தி தேடியபோது, பிரதமர் மோடியே இது தொர்பான பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பதைக் காண முடிந்தது.
இதன் மூலம் 2017ம் ஆண்டு வெளியான தபால் தலை படத்தை, தற்போது ராமர் கோவில் கட்டுமானப் பணி தொடங்க உள்ள நிலையில் தற்போது வெளியிட்டது போன்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்து வருவது உறுதியாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையும் தவறான தகவலும் கலந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையுடன் தவறான தகவலும் சேர்த்து பகிரப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மத்திய அரசு ராமாயண தபால் தலையை 2020 ஜூலையில் வெளியிட்டதா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
