ரயில் விபத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Archive

பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ரயில் விபத்து புகைப்படங்களை சேர்த்து ஒன்றாக புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "ரயில் விபத்து ஊதி பெரிதாக்குகிறார்கள். இரயில், விமானம், கார் பயணம் எதுவென்றாலும் விபத்துகள் நடக்கத்தான் செய்யும். மரணம் அடைந்தவர்களுக்குதான் 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படுகிறதே. இன்னமும் இந்த சிறு விவகாரத்தை ஏன் ஊதி பெரிதாக்குகிறீர்கள்? மோடிஜி என்ன கடவுளா விபத்தை நினைத்த மாத்திரத்தில் தடுத்து நிறுத்த" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், "இதுவே தமிழ்நாட்டில் நடந்திருந்தால் சும்மா இருந்திருப்பீயா? பாதயாத்திரை போறேன் பாடையில் போறேன்னு இந்நேரம் கம்பு சுத்திட்டு இருந்திருப்ப.." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

ட்விட்டரில் இந்த நியூஸ் கார்டை Kovai Harish என்ற ஐடி கொண்டவர் 2023 ஜூன் 5ம் தேதி பதிவிட்டிருந்தார். ஃபேஸ்புக்கில் Shine Kumar என்ற ஐடி கொண்டவர் 2023 ஜூன் 5ம் தேதி பதிவிட்டிருந்தார். இவர்களைப் போல பலரும் இந்த நியூஸ் கார்டை பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒடிசாவில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தை வைத்து பலரும் சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். விபத்து நடந்த உடன் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் களமிறங்கினர் என்று பழைய படத்தை பாஜக-வினர் பரப்பினர். இதை சிறு விஷயம் என்று அண்ணாமலை கூறியதாக தி.மு.க ஆதரவாளர்கள் பலரும் இந்த நியூஸ் கார்டை பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது. எனவே, இதை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டோம்.

இந்த நியூஸ் கார்டில் அண்ணாமலை படம் உள்ளது. ஆனால், அண்ணாமலை கூறியதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. மேலும், இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் சற்று புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டு போல உள்ளது. ஆனால், பின்னணி டிசைன் எல்லாம் இல்லை. எனவே, இது போலியானது என்று தெளிவாக நமக்குத் தெரிந்தது.

இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிட்டதா என்று அறிய 2023 ஜூன் 5 அன்று புதிய தலைமுறையில் வெளியான நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. தமிழ்நாட்டில் மது அருந்துவதால் நிகழும் மரணங்கள் தொடர்பாக அண்ணாமலை கருத்து தெரிவித்ததாக நியூஸ் கார்டு வெளியாகி இருந்தது. இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு அனுப்பினோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார்.

ரயில் விபத்தை சிறு நிகழ்வு என்று அண்ணாமலை கூறினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. இவை எல்லாம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்தன!

முடிவு:

ஒடிசா ரயில் விபத்தை சிறு நிகழ்வு என்றும், இதை எதிர்க்கட்சிகள் ஊதி பெரிதாக்குகின்றன என்றும் அண்ணாமலை கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்துள்ளோம். எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ரயில் விபத்து: சிறு விவகாரத்தை ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று அண்ணாமலை கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False