
பீகாரில் சாதிய வன்கொடுமை காரணமாக மூன்று பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் வரைலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

பெண்களுக்கு மொட்டை போடுவது, தட்டில் எதையோ அருந்தச் செய்வது உள்ளிட்ட புகைப்படங்களை கொலாஜாக பகிர்ந்துள்ளனர். அவற்றின் மேல் மற்றும் கீழ் பகுதியில் போட்டோஷாப் முறையில் டைப் செய்துள்ளனர். அதில், “சாதிய வன்கொடுமை. பீகாரில் மூன்று பெண்களுக்கு மொட்டையடித்து மனித மலத்தை கரைத்துக் குடிக்க வைத்த கொடுமை. எங்கே போனார்கள் பெண்களை தெய்வமாக மதிக்கும் கனவான்கள். மோடி சொன்னாரே வடமாநிலத்தவரைப் பார்த்து நாடே பெருமைப்படுகிறது என்று. இதுதான் உங்கள் பெருமையா மோடி அவர்களே?” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உண்மை அறிவோம்:
பீகாரில் மாந்திரீகம் செய்வதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடு முழுவதும் அதிர்ச்சிக்குரிய செய்தி பரவியது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவிலோ சாதி வன்கொடுமை என்று குறிப்பிட்டுள்ளனர். இது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
பீகாரில் மூன்று பெண்கள் மொட்டையடிக்கப்பட்டு சித்ரவதை என்று கூகுளில் டைப் செய்து தேடியபோது அது தொடர்பான செய்திகள் நமக்கு கிடைத்தன. தி இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் என அனைத்து முன்னணி செய்தி ஊடகங்களிலும் இது தொடர்பான செய்தி வெளியாகி இருந்தது. இந்து வெளியிட்ட செய்தியைப் பார்த்தோம்.

அதில், பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் மூன்று பெண்கள் மந்திரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மொட்டை அடித்து சித்ரவதை செய்யப்பட்டனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து கிராம மக்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 4ம் தேதி பீகாரின் வழக்குப் பகுதியில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தின் டாக்ரமா என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மூன்று பெண்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கிராமத்தில் இந்த பெண்கள் சில சடங்குகளைச் செய்துள்ளனர். இதனால் இவர்கள் மாந்திரீக காரியம் ஏதோ செய்கிறார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கிராம மக்கள் ஒன்று கூடித் தாக்கியுள்ளனர். தலையில் மொட்டையடித்து, அரை நிர்வாணமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
இது குறித்து கூடுதல் டி.ஜி.பி ஜித்தேந்திர குமார் கூறுகையில், “இந்த சம்பவம் தொடர்பாக 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.
இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியும் கிடைத்தது. அதிலும் மாந்திரிகம் தொடர்பாக இந்த சம்பவம் நடந்தது என்று கிழக்கு முசாபர்பூர் எஸ்.டி.ஓ (Sub-Divisional Officer) குந்தன் குமார் கூறியதாக தெரிவித்திருந்தனர்.
நம்முடைய ஆய்வில்,
பெண்கள் மீது தாக்குதல் நடந்தது உண்மை என்பது உறுதியாகி உள்ளது.
ஆனால், இந்த தாக்குதல் மாந்திரீகம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சாதி வன்கொடுமை காரணமாக பெண்கள் மூன்று பேரைத் தாக்கியதாக பகிரப்படும் தகவல் உண்மையும் தவறான தகவலும் சேர்ந்தது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:பீகாரில் மூன்று பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சாதி காரணமா?
Fact Check By: Chendur PandianResult: Partly False
