
‘’தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்,’’ என்ற தலைப்பில் ஒரு ஃபேஸ்புக் பதிவை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Claim Link | Archived Link |
என்ற ஃபேஸ்புக் ஐடி இந்த பதிவை வெளியிட்டுள்ளது. இதில், ராகுல் காந்தி எம்பியாக தேர்வு செய்யப்பட்ட கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் முஸ்லீம்கள் பச்சைக் கொடி பிடித்து, தனி நாடு கேட்டு போராடுகிறார்கள், எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்பட்டுள்ளதுபோல, ராகுல் காந்திக்கும் மலப்புரம் மாவட்டத்திற்கும் சம்பந்தம் இல்லை. அவர் வயநாடு மக்களவை தொகுதியின் உறுப்பினராக உள்ளார். வயநாட்டிற்கும், மலப்புரத்திற்கும் 100 கிலோ மீட்டருக்கும் மேல் தொலைவு வித்தியாசம் உள்ளது.
எனவே, எடுத்த எடுப்பிலேயே மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறப்படும் தகவல் தவறு என தெளிவாகிறது. சிஏபி எனப்படும் Citizenship Amendment Bill பற்றி இவர் நினைத்த கருத்தைக் கூறாமல், ராகுல் காந்தி, மலப்புரம், முஸ்லீம்கள், தனிநாடு என முழங்காலுக்கும், உச்சந்தலைக்கும் முடிச்சு போட்டு எழுதியுள்ளார்.
இதற்கடுத்தப்படியாக, மேற்கண்ட ஃபேஸ்புக் புகைப்படத்தில் இருப்பவர்கள் மலப்புரம் பகுதி முஸ்லீம்களா, அவர்களின் கையில் உள்ள பதாகைகளில் எழுதியிருப்பது என்ன என்பது பற்றியும் விவரம் சேகரித்தோம்.
இதன்படி, அந்த புகைப்படத்தை வைத்து தகவல் தேடியபோது, இதுதொடர்பான ட்விட்டர் பதிவு ஒன்றின் விவரம் கிடைத்தது.
https://www.trendsmap.com/twitter/tweet/1205576618825146368
அந்த பதிவின் புகைப்படத்தை பார்த்தபோது, அதில் கொல்லம் என எழுதியிருப்பதை தெளிவாகக் காண முடிந்தது. அத்துடன், நமது கேரள நண்பர் ஒருவரிடம் இதில் என்ன எழுதியுள்ளது என்று விசாரித்தபோது அவர், We Oppose Citizenship Amendment Bill என்றும், Dakshina Kerala Lajathul Mualimeen (DKLM) என்றும் எழுதப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேற்கண்ட எழுத்துகளை வைத்து, கீவேர்ட் முறையில் ஏதேனும் செய்தி, வீடியோ கிடைக்கிறதா என தேடிப் பார்த்தோம். அப்போது, இதுதொடர்பான செய்தி, வீடியோ ஆதாரம் கிடைத்தது.
இதன்படி, கொல்லம் பகுதி முஸ்லீம்கள், Citizenship Amendment Bill-க்கு எதிராக பேரணி நடத்தியதை வைத்து, தனிநாடு கேட்டு மலப்புரம் பகுதி முஸ்லீம்கள் போராடுகிறார்கள் என தவறான தகவல் பரப்பியுள்ளனர் என தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில் தவறான தகவல் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:தனி நாடு கேட்டு போராடிய மலப்புரம் முஸ்லீம்கள்: உண்மை என்ன?
Fact Check By: Pankaj IyerResult: False
