தமிழகத்தில் 9 பேர் மரணம் என்று மு.க.ஸ்டாலின் வதந்தி பரப்பினாரா?

Coronavirus அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் இறந்ததாக ட்விட்டரில் வதந்தி பரப்பிவிட்டு அதை நீக்கிவிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Twitter LinkArchived Link

மு.க.ஸ்டாலின் ட்வீட் பதிவு ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டுள்ளது. அதில், “தமிழகத்தில் கொரோனாவால் 9 பேர் உயிரிழப்பு, 8000 பேருக்கு பாதிப்பு, சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தல் ஆகியவை மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டிருந்தது.

இந்த பதிவை  Ian Malcolm | Stay Home. Save Lives.என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மார்ச் 23, 2020 அன்று வெளியிட்டுள்ளார். 

Facebook LinkArchived Link

அஇஅதிமுக கடலாடி ஒன்றியம் என்ற ஃபேஸ்புக் பக்கம் 23 மார்ச் 2020 அன்று இதை வெளியிட்டுள்ளது. இதைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஒன்பது பேர் இறந்துவிட்டார்கள் என்று ஸ்டாலின் கூறினாரா என்று தெரிந்துகொள்ள, அந்த ட்வீட் பதிவை ஸூம் செய்து பார்த்தோம். அதில், 9 பேருக்கு பாதிப்பு என்று மட்டுமே இருந்தது. ஆனால் தெளிவாகத் தெரியவில்லை. 

ட்விட்டரில் பலரும் இந்த பதிவை வைரலாக ஷேர் செய்து வரும் நிலையில் வேறு ஒருவர் வெளியிட்ட பதிவை பார்த்தபோது 9 பேருக்கு பாதிப்பு என்று தெளிவாகத் தெரிந்தது. 

ஸ்டாலின் ட்வீட் வெளியிட்ட உடனேயே ஊடகங்களில் செய்தி வெளியாகி விடுகின்றன. அதனால், யாராவது ஒன்பது பேர் இறந்தார்கள் என்று ஸ்டாலின் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளார்களா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. 

ஸ்டாலின் பக்கத்தில் அழிக்கப்பட்டு, புதிதாக போடப்பட்டது என்று குறிப்பிடும் அந்த பதிவைப் பார்த்தோம். வழக்கமாக ஸ்டாலின் வெளியிடும் அறிக்கைகளில் உள்ள தலைப்பு சார்ந்தே ட்வீட் பதிவு இடப்படுகிறது. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அந்த பதிவிலும் தலைப்பைச் சார்ந்தே ட்வீட் பதிவிடப்பட்டு இருந்தது.

Archived Link

அதில், “அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு மாத சம்பளம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாதத் தேவைக்கான நிதியுதவி, ஏழைகளுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். தனிமைப்படுத்துதலை பொதுமக்கள் கவனமும், அக்கறையும் கொண்டு கடைப்பிடிக்க வேண்டும்” என்று இருந்தது. 

தி.மு.க செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான சரவணன் அண்ணாதுரை இந்த பதிவு பற்றி தன்னுடைய ட்விட்ர் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருந்தார். அதில், “நம் தலைவர் @mkstalin  இப்படி ஒரு பதிவை போட்டிருப்பதாய் பொய் தகவல் பரப்பி வருகின்றனர் சமூக விரோதிகள். சட்டப்பூர்வ நடவடிக்கை நிச்சயம். இதற்கு பெயர் மோசடி, போர்ஜரி. ஜாக்கிரதை” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், “இது போலி என எடுத்து சொல்லும் கடமை நம் அனைவருக்கும் உண்டு” என்று குறிப்பிட்டிருந்தார்.

https://twitter.com/asaravanan21/status/1242047163506417666

Archived Link

இதன் அடிப்படையில், மு.க.ஸ்டாலின் வதந்தி ட்வீட்டை வெளியிட்டார் என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று நாம் மார்ச் 24, 2020 அன்று ரேட்டிங் கொடுத்திருந்தோம். 

ஆனால், ஃபேஸ்புக் பயனாளர் ஒருவர் ‘மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வெளியிட்ட தவறான பதிவு பற்றிய ஆர்கிவ் லிங்க்’ உள்ளிட்ட ஆதாரங்களை மெயில் மூலமாக நமக்கு அளித்து, இந்த ஆய்வுக்கட்டுரையின் ரேட்டிங்கில் திருத்தம் செய்யும்படி மார்ச் 27, 2020 அன்று முறையிட்டார். 

இதையடுத்து, மீண்டும் ஒருமுறை இதுபற்றி ஆய்வு செய்தோம். இதன்பேரில் திமுக சார்பாக ஏற்கனவே நம்மிடம் பேசிய சரவணன் அண்ணாதுரையை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். 

அதற்கு அவர், ‘’இதனை நான் முன்பே சரியாகக் கவனிக்கவில்லை. இப்படி மு.க.ஸ்டாலின் ஐடி ட்விட்டரில் தவறுதலாக பதிவு வெளியிட்டது உண்மைதான். ஆனால், தவறை உணர்ந்து உடனடியாக சில நிமிடங்களிலேயே அந்த பதிவு நீக்கப்பட்டுவிட்டது. அந்த பதிவை அவர் அழிக்காமல் அப்படியே வைத்திருந்தால்தான் அவர் வதந்தி பரப்புவதாக அர்த்தம்,’’ என்றார்.

ஆகவே, நமது வாசகர் கொடுத்த ஆதாரம் சரியாக இருப்பதால், மேற்கண்ட ஆய்வுக்கட்டுரையின் ரேட்டிங்கை ‘தவறு’ என்பதில் இருந்து ‘உண்மை’ என மாற்றுகிறோம். இந்த ஆதாரம் நமக்கு முன்பே கிடைத்திருந்தால், இன்னும் சற்று பயனுள்ளதாக இருந்திருக்கும் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

முடிவு:

உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு உண்மையான கருத்தை உள்ளடக்கியதாக உள்ளதென்று தெளிவாகிறது.

Avatar

Title:தமிழகத்தில் 9 பேர் மரணம் என்று மு.க.ஸ்டாலின் வதந்தி பரப்பினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: True

1 thought on “தமிழகத்தில் 9 பேர் மரணம் என்று மு.க.ஸ்டாலின் வதந்தி பரப்பினாரா?

Comments are closed.