அரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா? விபரீத ஃபேஸ்புக் பதிவு
அரளியை நல்லெண்ணெய் விட்டு அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து குடித்தால் சகல விதமான வியாதிகளும் குணமாகும் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
அரளி காய் போன்ற ஒன்றின் படத்தை பயன்படுத்தி போட்டோ கார்டு உருவாக்கப்பட்டள்ளது. அதில், "இந்த மூலிகையை நல்லெண்ணெய் விட்டு பசை போல அரைத்து, பல் படாமல் பசும்பாலுடன் குடிக்க சகல விதமான வியாதிகளும் குணமாகும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, KG Memes என்ற ஃபேஸ்புக் பக்கம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 2020 ஜனவரி 4ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
படத்தைப் பார்க்கும்போது இது அரளி காய் போல உள்ளது. இதை மூலிகை என்று குறிப்பிட்டுள்ளனர். விஷத் தன்மை கொண்ட அரளி காயை, விதையை அரைத்துச் சாப்பிட்டால் உயிர் போய்விடும். ஆனால், சிரிக்க சிந்திக்க சந்தோஷம் இலவசம் என்று கூறிக்கொண்டு அரளி விதையை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். இதனை நையாண்டியாகக் கருதவே முடியாது. யாராவது இது உண்மை என்று நம்பி சாப்பிட்டால் உயிர் போய்விடும்.
கமெண்ட் பகுதியில் பலரும் இந்த பதிவை நீக்கிவிடும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். ஒரு சிலர் இதை அரைத்துத்தான் சாப்பிட வேண்டுமா என்று கேள்வி எல்லாம் கேட்டிருந்தனர். எனவே, இந்த பதிவு பற்றிய ஆய்வு மேற்கொண்டோம்.
இது குறித்து மூலிகை ஆராய்ச்சியாளர் எம்.மரிய பெல்சினிடம் கேட்டோம். அதற்கு அவர், "விஷத்தன்மை கொண்ட அரளிச் செடி மற்றும் அரளிக்காய்க்கு மருத்துவ குணம் இருக்கிறது; இல்லையென்று மறுக்கமுடியாது. அதுவும் உள் ஆகாரமாகக் கொடுக்கப்படுவது இல்லை. கைதேர்ந்த மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி மட்டுமே இந்தச் செடியை மருந்தாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் இது ஆபத்து ஏற்படுத்தும். குழந்தைகள் ஒரு அரளி இலையைச் சாப்பிட்டால்கூட மரணம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கவனம் தேவை.
அரளியில் செவ்வரளி, மஞ்சள் அரளி, வெள்ளை அரளி போன்ற வகைகள் இருக்கின்றன. பொதுவாக இவற்றின் இலை, வேர் மற்றும் வேர்ப்பட்டை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. தோல் நோய், பால்வினை நோய்ப் புண்கள் மற்றும் கண் நோய் மட்டுமன்றி வீக்கம், கழலையை கரைக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் தொழுநோய், நாள்பட்ட புண்கள், குழிப்புண் போன்றவற்றுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பெரும்பாலும் இவை உள் மருந்தாகப் பயன்படுத்தப்படுவதில்லை.
தற்கொலை செய்யும் பலர் அரளி விதையையும் அரளிக்காயையும் அரைத்துச் சாப்பிட்டு உயிரிழக்கின்றனர். அரளிக்காய் விஷமுள்ளது என்பதைத் தெரிந்தே சாப்பிடும் பலர் இருக்க சிறுவர்களில் சிலர் இந்தக்காயைப் பற்றித் தெரியாமல் சாப்பிட்டு உயிரிழக்கின்றனர். இப்படிப்பட்ட சூழலில் 'நல்லெண்ணெய் விட்டு அரைத்துச் சாப்பிடுங்கள், பசும்பால் சேர்த்து பல் படாமல் குடியுங்கள்' என்று ஒரு பதிவு போடப்பட்டிருக்கிறது. இது நகைச்சுவைக்காகப் போடப்பட்டிருக்கிறது என்பதைத் தெரியாமல் நோய் குணமாகும் என்று சாப்பிட்டால் உயிர்ப்பலியாக வாய்ப்பு உள்ளது. 'கண்டிஷன்ஸ் அப்ளை' என்று ஒரு ஓரத்தில் போடப்பட்டிருப்பதுபோல 'சிரிக்க சிந்திக்க' என்று போட்டிருக்கிறார்கள். இது உயிருடன் விளையாடுவதுபோல உள்ளது. எனவே, இதுபோன்ற தகவல்களை பொதுவெளியில் வெளியிடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மிகவும் வருந்தத்தக்கதும் கூட" என்றார்.
நக்கல், நையாண்டி செய்ய ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உள்ளன. உயிரோடு விளையாடும் செயல்கள் செய்ய வேண்டாமே... இந்த பதிவைப் பார்த்து யாராவது அரளி விதையை அரைத்துச் சாப்பிட்டு உயிரிழந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது? விளையாட்டாகக் கூட இதுபோன்ற தவறான விஷயங்களைப் பகிராமல் இருப்பதே நல்லது. அரளி உயிரைப் பறிக்கக் கூடியது என்பதால் இந்தப் பதிவு விபரீதமானது, தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:அரளி காயைச் சாப்பிட்டால் சகல வியாதியும் குணமாகுமா? விபரீத ஃபேஸ்புக் பதிவு
Fact Check By: Chendur PandianResult: False