ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கேட்டு பாகிஸ்தான் இளைஞர்கள் கொடி பிடித்தார்களா?
பாகிஸ்தான் இளைஞர்கள் காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கொடுங்கள் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்ததாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
சமூக ஊடகத்தில் யாரோ ஷேர் செய்த பதிவை ஸ்கிரீன் ஷாட் எடுத்தள்ளனர். அதில் படத்தில், இளைஞர்கள் ஒரு பேனரில், எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வேண்டும் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பேனரை பிடித்திருக்கின்றனர். அதற்கு மேல் பதிவு பகுதியில், பாகிஸ்தானின் இன்றைய நிலை, காஷ்மீர் வேண்டாம், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொடுங்கள் என்று இந்தியாவை நோக்கி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Mangayar Thilakam என்பவர் 2020 ஏப்ரல் 16ம் தேதி மோடி ராஜ்யம் Modi Rajyam என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். நிலைத் தகவலில், "இத்தாலி, இங்கிலாந்து, அமேரிக்கா எல்லாம் அடங்கி விட்டது. அந்த வகையில் இப்போது பாகிஸ்தானும். கொரோனா எல்லோரையும் நார் நாரா கிழிக்குது. கடவுள் இருக்காண்டா கொமாரு" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்த படத்தைப் பார்க்க அசல் போல தெரியவில்லை. "We don't want Kashmir, give us" ஒரு ஃபாண்ட் வடிவத்திலும், Hydroxychloroquine ஃபாண்ட் டிசைனிலும் சிறிய வித்தியாசம் இருப்பதையும் காண முடிந்தது. எனவே, வேறு பதிவில் இருந்து எடுத்து மாற்றியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்தது. எனவே, படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம்.
"காஷ்மீர் வேண்டாம் விராட் கோலியை கொடுங்கள்" என்று பாகிஸ்தானில் பேனர் பிடித்த இளைஞர்கள் என்று கடந்த ஆண்டு இதே படம் சமூக ஊடங்களில் வைரலானதாகவும் ஆனால், இது தவறான தகவல் என்று நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலம் உள்ளிட்ட பல ஊடகங்களும் கட்டுரை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.
அவற்றை ஒதுக்கிவிட்டு, நம்முடைய ரிவர்ஸ் இமேஜ் முடிவுகளைத் தேடினோம். நீண்ட தேடலுக்குப் பிறகு இந்தியா டுடே இதழில் அசல் படத்துடன் 2016ம் ஆண்டு செய்தி வெளியிட்டிருப்பது தெரியவந்தது. அதில் பாகிஸ்தான் கொடி பின்னணியில், வீ வாண்ட் ஆசாதி என்று எழுதப்பட்டு இருந்தது.
இந்த பேனரைப் பிடித்திருக்கும் நபர்கள் எல்லாம் ஒன்றாக இருக்க, பேனரில் எழுதப்பட்டிருந்ததை மட்டும் போட்டோஷாப்பில் மாற்றியிருப்பது தெரிந்தது.
நம்முடைய ஆய்வில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை கேட்பது போன்று புகைப்படம் எடிட் செய்யப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே படத்தை வைத்து விராட் கோலி வேண்டும் என்று பாகிஸ்தானியர்கள் கேட்டதாக வதந்தி பரப்பப்பட்டது உறுதியாகி உள்ளது.
இதன் அடிப்படையில் காஷ்மீர் வேண்டாம், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் வேண்டும் என்று பாகிஸ்தானியர்கள் கோரிக்கை விடுத்ததாகப் பகிரப்படும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கேட்டு பாகிஸ்தான் இளைஞர்கள் கொடி பிடித்தார்களா?
Fact Check By: Chendur PandianResult: False