கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், குழந்தை என்று ஒரு படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

பாதுகாப்பு கவசம் அணிந்த தாய் ஒருவர் தன் மடியில் குழந்தையைக் கட்டியணைத்தபடி இருக்கும் படத்தை பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், "கொரானா கொடூரம்..உலகின் கண்ணீரை வர வைத்த படம்... இறைவா உலகின் எந்த எதிரி வீட்டு தாயிக்கும் இந்த நிலமை வரக்கூடாது.. இறைவா..." என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த படத்தை Rajesh Hindu Munnani என்பவர் மார்ச் 24, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா பாதிப்பு என்று நிலைத் தகவலில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், படத்தைப் பார்க்கும்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தை போல உள்ளது. புற்றுநோய்க்கு கீமோ தெரப்பி சிகிச்சை அளிக்கும்போது முடிகொட்டுதல் உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும்.

மேலும், அந்த காலக்கட்டத்தில் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாகவே இருக்கும் என்பதால், எளிதில் வேறு நோய் ஏற்பட்டுவிடலாம் என்பதால் மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது வழக்கம். எனவே, புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் குழந்தை படத்தை எடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தவறாக வெளியிட்டிருப்பது தெரிந்தது.

உண்மையில் இந்த புகைப்படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம். படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடியபோது பலரும் இந்த படத்தை தங்கள் சமூக ஊடக பக்கங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய், சேய் என்று பகிர்ந்து வருவதைக் காண முடிந்தது.

Archived Link

தொடர்ந்து தேடியபோது 2019ம் ஆண்டு ஜூலை 21 இந்த படத்தை Gelecek Eğitimde என்ற ட்விட்டர் பக்கத்தில் தாயின் வலி என்று குறிப்பிட்டு வெளியிட்டிருந்தனர். அதில், புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவரும் தன்னுடைய மகனை வெறுங்கையால் கூட தொட முடியாத தாய் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த படம் எங்கே எப்போது எடுத்தது என்று குறிப்பிடவில்லை.

கடந்த ஆண்டே வெளியாகி இருப்பதாலும் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுக்கும் சிறுவன் என்று குறிப்பிட்டதாலும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் பதிவில் கூறியபடி இவர்கள் கொரோனா நோய்க்கு சிகிச்சை எடுப்பவர்கள் இல்லை என்பது உறுதியானது. இருப்பினும், இந்த அசல் படம் எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தொடர்ந்து தேடினோம்.

நம்முடைய தேடலில் இந்த படம் magnumphotos.com என்ற புகைப்படம் விற்பனை தளத்தில் விற்பனைக்கு இருப்பது தெரிந்தது. அதில், இந்த படம் 1985ம் ஆண்டு அமெரிக்காவின் சியாட்டலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தனர். "Fred Hutchinson Cancer Center மருத்துவமனையில் நோய்க் கிருமிகள் செல்ல முடியாத அளவுக்கு உள்ள லேமினார் காற்று பாதுகாப்பு அறையில் எலும்பு மஞ்சை மாற்று அறுவைசிகிச்சைக்கு முன்பு கதிர்வீச்சு சிகிச்சை பெற்ற குழந்தை" என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

magnumphotos.comArchived Link

நம்முடைய ஆய்வில்,

இந்த புகைப்படம் கொரோனா பாதிப்பு உள்ள இந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

படத்தில் உள்ள குழந்தை புற்றுநோய் சிகிச்சை பெற்றபோது எடுத்தது என்பது உறுதியாகி உள்ளது.

இந்த படம் 1985ம் ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், 35 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட படத்தை இப்போது கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் என்று பகிர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:கொரோனாவால் பாதிக்கப்பட்ட தாய் - சேய் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False