மோடி உருவ பொம்மையை எரிக்கும் வெளிநாட்டினர்!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

இந்தியா சமூக ஊடகம் சமூகம்

மோடியின் உருவ பொம்மையை வெளிநாட்டினர் எரிப்பதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook Link 1Facebook Link 2Archived link 1Archived link 2

மோடியின் உருவபொம்மை எரிக்கப்படும் வீடியோ ஒன்றை Iŋterŋatiioŋal Ƿwįƞçǯzx என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2020 மே 15ம் தேதி ஷேர் செய்திருந்தார்.

இதன் அசல் பதிவு, Alawdeen Shaikalawdeen என்பவரால் 2019ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி வெளியாகி இருந்தது. மக்கள் சூழ்ந்து, பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரின் உருவப்படங்களை எரிக்கின்றனர். நிலைத் தகவலில், “மோடி வெளிநாட்டில் மதிக்கப்படவில்லை என்று யார் சொல்வது, எவ்வளவு மரியாதை என்பதை நீங்களே பாருங்கள், ஆனால் நமது இந்திய ஊடகங்கள் இதையெல்லாம் பார்க்கவில்லை…” என்று குறிப்பிட்டு இருந்தது. அசல் பதிவை 67 ஆயிரம் பேர் ஷேர் செய்திருந்தனர். 

உண்மை அறிவோம்:

வெளிநாட்டில் பிரதமர் மோடிக்கு எவ்வளவு மரியாதை பாருங்கள் என்று வீடியோ பகிரப்பட்டுள்ளது. அது எந்த நாடு, எப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டது. எதற்காக மோடியின் உருவபொம்மையை எரிக்கின்றனர் என்று எந்த ஒரு காரணத்தையும் கூறவில்லை. 

வீடியோவின் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து மோடியின் உருவபொம்மை எரிக்கப்பட்டதாக பலரும் இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்ததை காண முடிந்தது.

இதற்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் என்ன தொடர்பு, அவர் படத்தை ஏன் வைக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுந்தது. எனவே, சமூக ஊடக பதிவுகள் தவிர்த்து, வேறு ஏதும் ஆதாரம் உள்ளதா என்று தேடினோம்.

அப்போது 2019 ஜனவரி 23ம் தேதி யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ கிடைத்தது. அதில், மிசோரமில் குடியுரிமை திருத்த சட்டமசோதாவை எதிர்த்து போராட்டம் நடந்ததாக குறிப்பிட்டிருந்தனர். அதில் பிரதமர் மோடி, அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் ஆகியோரின் உருவ பொம்மைகள் எரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

thelogicalindian.comArchived Link 1
ndtv.comArchived Link 2

மிசோரம், குடியுரிமை திருத்த மசோதா ஆகிய வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு கூகுளில் தேடியபோது சில செய்திகள் கிடைத்தன. 2019 ஜனவரி 23ம் தேதி குடியுரிமை திருத்த சட்டமசோதாவுக்கு எதிராக மிசோரம் முழுக்க போராட்டங்கள் நடந்ததாக பல செய்திகள் நமக்கு கிடைத்தன. thelogicalindian.com என்ற ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியில் என்.டி.டி.வி செய்தியை மேற்கோள் காட்டியிருந்தனர்.

இதன் மூலம் இந்த வீடியோ வெளிநாட்டில் எடுக்கப்பட்டது இல்லை என்று தெளிவாகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்களின்படி, மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், மிசோரமில் நடந்த சம்பவத்தை, வெளிநாடு என்று கூறி தவறான தகவல் பகிர்ந்துள்ளதாக, நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை, எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுவோம்.

Avatar

Title:மோடி உருவ பொம்மையை எரிக்கும் வெளிநாட்டினர்!- ஃபேஸ்புக் தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: Partly False