மோடி புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்தாரா எடப்பாடி பழனிசாமி?

அறிவியல் சமூக ஊடகம் | Social

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியின் புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்திருந்ததாகக்கூறி, ஒரு ஃபேஸ்புக் பதிவு வைரலாகி வருவதை காண நேரிட்டது. இதன் உண்மைத்தன்மையை பரிசோதிக்க முடிவு செய்தோம். அப்போது கிடைத்த விவரங்களை இங்கே தொகுத்து அளித்துள்ளோம்.

தகவலின் விவரம்:

அடப்பாவி அம்மா ஆவி உன்ன சும்மா விடாது

Archived Link

ஏப்ரல் 7ம் தேதி வெளியிடப்பட்ட பதிவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின், புகைப்படத்தை பகிர்ந்து, அவரது சட்டை பாக்கெட்டில், பிரதமர் மோடியின் புகைப்படம் இருப்பதுபோல, வட்டமிட்டு காட்டியுள்ளனர். மேலும், ‘’அடப்பாவி அம்மா ஆவி உன்ன சும்மா விடாது,’’ எனவும் விமர்சித்துள்ளனர். அஇஅதிமுக மற்றும் பாஜக எதிர்ப்பு உணர்வு கொண்டவர்களால், இந்த பதிவு, இதுவரை 10,000க்கும் அதிகமான ஷேர்களை பெற்றுள்ளது.

உண்மை அறிவோம்:
கடந்த 2016ம் ஆண்டு ஜெயலலிதா மருத்துவமனையில் இறந்துவிட, அவருக்குப் பின் முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார். இதேபோல, அஇஅதிமுக.,வின் பொதுச் செயலாளராக சசிகலா பதவியேற்றார். ஆனால், சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அஇஅதிமுக கட்சி இரண்டாக பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்த சசிகலா, தன்னை புதிய முதல்வராக நியமிக்கும்படி, ஆளுநரிடம் மனு செய்தார். அத்துடன், அஇஅதிமுக எம்எல்ஏ.,க்கள் பலரையும் தனது கட்டுப்பாட்டில் வைப்பதற்காக, சென்னைக்கு வெளியே தனியார் ரிசார்ட் ஒன்றில் சசிகலா பிடித்து வைத்திருந்தார். இதுபற்றி ஏசியாநெட் தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

ஆனால், சசிகலாவின் முயற்சிக்கு ஆளுநர் மற்றும் மத்திய அரசு தரப்பில் யாரும் செவிசாய்க்கவில்லை. அதேசமயம், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலாவுக்கு, 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக, உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து, மனம் உடைந்துபோன சசிகலா, வேறு வழியின்றி, புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். இதுபற்றி ஒன்இந்தியா தமிழ் வெளியிட்ட ஆதார செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

அந்த நேரத்தில்தான், கட்சியை கட்டுப்பாட்டில் வைக்க, டிடிவி தினகரனை பொறுப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும் நியமிப்பதாக, சசிகலா அறிவித்தார். இதுதொடர்பாக, மாலைமலர் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

பின்னர், சசிகலா உள்ளிட்ட 3 பேர், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து தி இந்து தமிழ் திசை வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆனால், அவர் சிறைக்குச் சென்ற பின்னர், எடப்பாடி பழனிசாமிக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அஇஅதிமுக யார் கட்டுப்பாட்டில் எனத் தெரியாத அளவுக்கு இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்ய தொடங்கினார்கள். இதுதொடர்பாக, பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

இதையடுத்து, புதிய பரபரப்பாக, தனது முதல்வர் பதவியை உறுதி செய்யும் வகையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சிக்குள் சேர்த்து, ஆட்சியில் துணை முதல்வர் பதவி தந்து சமாதானம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. இவர்கள் இருவரும் சேர்ந்துகொண்டு, டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்குவதாகவும், இனி அஇஅதிமுக.,வுக்கு, தாங்களே பொறுப்பாளர்கள் எனவும், அறிவித்தனர். இதுபற்றி தமிழ் இந்து திசை வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

Archived Link

இப்படி பல அதிரடி திருப்பங்கள் நிறைந்த எடப்பாடி பழனிசாமியின் வாழ்க்கையில், அவர் மோடியின் அடிமையாகச் செயல்படுவதாக, கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுபற்றி விகடன் இணையதளம் வெளியிட்ட செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இத்தகைய சூழலில்தான், எடப்பாடி பழனிசாமியின் சட்டை பாக்கெட்டில் மோடியின் புகைப்படம் உள்ளதைப் போல சித்தரித்து, இந்த பதிவை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படம் உண்மையானதுதானா, என பரிசோதிக்க, Yandex ரிவர்ஸ் இமேஜ் தேடல் செய்தோம். அதில், இது சித்தரிக்கப்பட்ட புகைப்படம் என்றும், இப்படி தவறாக போட்டோஷாப் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்றும் ஆதார செய்திகளின் விவரம் கிடைத்தது.

இதன்படி, கடந்த 23, டிசம்பர் 2017ல், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை தவறாக சித்தரித்து, அதை சமூக ஊடகங்களில் பரப்பிய குற்றத்திற்காக, 28 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார் என, அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. அந்த செய்தியை படிக்க இங்கே கிளிக் செய்யவும். வீடியோ ஆதாரம் கீழே தரப்பட்டுள்ளது.

Archived Link

எடப்பாடி பழனிசாமி எப்போதும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைக்கும் வழக்கம் கொண்டவர் ஆவார். பிரதமர் மோடியை வரவேற்கும்போதுகூட அவர், ஜெயலலிதா புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்திருப்பது வழக்கம். ஆதார படம் கீழே தரப்பட்டுள்ளது.

நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) மேற்கண்ட புகைப்படம், தவறான ஒன்று.
2) 2017ம் ஆண்டில் பகிரப்பட்ட இதனை தற்போது மீண்டும் அரசியல் காரணங்களுக்காக பகிர்ந்துள்ளனர்.
3) இந்த புகைப்படத்தை பகிர்ந்த குற்றத்திற்காக, அப்போதே சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த உண்மை புரியாமல் Sasikumar என்ற நபர், மீண்டும் பகிர்ந்துள்ளார்.
4) இவர், தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக, இதைச் செய்துள்ளார் என, அவரது ஃபேஸ்புக் பதிவுகளின் மூலமாக, உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:
உரிய ஆதாரங்களின்படி, மேற்கண்ட புகைப்படம் தவறாகச் சித்தரிக்கப்பட்ட ஒன்று என, உறுதி செய்யப்படுகிறது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான புகைப்படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் எதையும் உறுதி செய்யாமல் சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். அவ்வாறு நீங்கள் பகிர்ந்தது பற்றி யாரேனும் புகார் செய்தால், உரிய சட்ட நடவடிக்கையை நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Avatar

Title:மோடி புகைப்படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்தாரா எடப்பாடி பழனிசாமி?

Fact Check By: Parthiban S 

Result: False