
தமிழகத்தில் வருகிற ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். அது உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
புதிய தலைமுறை வெளியிட்ட செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “ஜன.6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். தமிழகத்தில் பள்ளிகள் ஜனவரி 6ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை MyTrichy என்ற ஃபேஸ்புக் பக்கம் 2020 ஜூன் 25ம் தேதி வெளியிட்டுள்ளது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் எப்போது தொடங்கப்படும் என்று தெரியாத நிலை உள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இது தொடர்பாக விவாதிக்கப்பட்டு தேதியை முதலமைச்சர் அறிவிப்பார் என்று கூறிவருகிறார். இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டதாக தகவல் பரவி வருகிறது. இணையத்தில் பலரும் இந்த தகவலை பகிர ஆரம்பித்துள்ளனர்.
இந்த நியூஸ் கார்டு பார்க்க உண்மையானது போல உள்ளது. ஜனவரி 6ம் தேதி பள்ளி திறப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு ஏதும் வெளியிட்டதா என்று தேடியபோது, ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக பள்ளிகள் 2020ம் ஆண்டு ஜனவரி 6ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு, செய்தி நமக்கு கிடைத்தது.
தற்போது பள்ளி திறப்பது தொடர்பாக ஏதும் அறிவிப்பு வெளியானதா என்று தேடியபோது மறுப்பு செய்திகள் கிடைத்தன. ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற தகவலை பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மறுத்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக ஆலோசிக்கவில்லை. பள்ளிகள் திறப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார் என்று செங்கோட்டையன் அளித்த பேட்டிகள் நமக்கு கிடைத்தன.
கடந்த ஜனவரி மாதம் வெளியான செய்தியை எடுத்து தற்போது வெளியான அறிவிப்பு போல பதிவிட்டுள்ளார்கள். அதில் எந்த இடத்திலும் கொரோனாவைப் பற்றி குறிப்பிடவில்லை. பள்ளிகள் மூடப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், பழைய பதிவு வெளியிட்டிருப்பது மக்களைக் குழப்பும், தவறான புரிதலை ஏற்படுத்தும் செயலாகவே இருக்கும். இதன் அடிப்படையில் இந்த பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049044263) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:Fact Check: ஜனவரி 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்ததா?
Fact Check By: Chendur PandianResult: False
