குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா?

Coronavirus அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்கு சென்ற டாக்டர் வந்தனா திவாரி குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உயிரிழந்தார் என்று ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

Facebook LinkArchived Link

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரின் படத்தைப் பகிர்ந்துள்ளனர். ஆங்கிலத்தில், “டாக்டர் வந்தனா திவாரி இன்று மரணம் அடைந்தார். அவரது ஆன்மா இளைப்பாற வேண்டுவோம். கடந்த வாரம் உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரிசோதனைக்காக சென்ற இவரை குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மிகக் கடுமையாக தாக்கினார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பதிவை, Ranjit Radhakrishnan என்பவர் 2020 ஏப்ரல் 9ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கொரோனா பரவுதல் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படும் பதிவுகள் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன. உத்தரப்பிரதேசத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் பெண் மருத்துவர் உயிரிழந்துவிட்டதாக பகிர்ந்து வருகின்றனர். இது உண்மையா என்று ஆய்வு மேற்கொண்டோம்.

சிகிச்சை பெற்று வருபவர் படத்தை மட்டும் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, போபால் சமாச்சார என்ற ஊடகம் இந்த படத்தை வெளியிட்டு செய்தி வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதை மொழிமாற்றம் செய்து பார்த்தோம். “கொரோனா போராளி வந்தனா திவாரியின் மிக வலி மிக்க மரணம்… டிஎம் முதல் சி.எம் வரை யாரும் உதவவில்லை” என்று தலைப்பிட்டிருந்தனர்.

Search Linkbhopalsamachar.comArchived Link

செய்தியின் உள்ளே, “மத்தியப் பிரதேசம் குவாலியர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா போராளி பார்மசிஸ்ட் வந்தனா திவாரி மரணம் அடைந்தார். இடைவெளி இன்றி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டதால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு உயிரிழந்தார். அவரை ஒரு மனிதராகக் கூட மதிக்காமல் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் தவறியது அவமானகரமான நிகழ்வு. அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமாக எந்த சிகிச்சையும் அளிக்காத நிலையில் அவருடைய கணவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். சிவபுரி மருத்துவக் கல்லூரி முதல்வர் முதல் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் வரை யாரும் அவருக்கு உதவவில்லை.

சிவபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக வந்தனா திவாரி பணியாற்றி வந்தார். கொரோனா தடுப்பு பணியில் இவரும் ஈடுபடுத்தப்பட்டார். கடந்த 31ம் தேதி இவரது உடல்நிலை மோசமானது. அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை மகப்பேறு மகளிர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அங்கு 24 மணி நேரம் அவர் வைக்கப்பட்டிருந்தார். முதல் உதவி சிகிச்சை கூட வந்தனாவுக்கு வழங்கப்படவில்லை.

கடைசியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் ஏப்ரல் 1ம் தேதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தனர். எம்.ஆர். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட்டது, ஆனால் வந்தனா கோமாவுக்கு சென்றுவிட்டார். வந்தனா பணியாற்றிவந்த மருத்துவக் கல்லூரியிலிருந்து யாரும் உதவவில்லை. இது குறித்து கலெக்டரிடம் கூறியபோது அவரும் உதவவில்லை. இது பற்றி போபால் செய்தித்தாளிலும் வந்தது. முதல்வரும் கூட இதை புறக்கணித்துவிட்டார்” என்றார் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

மத்தியப் பிரதேசத்தில் மருந்தாளுநராக பணியாற்றிய இவர் எப்படி உத்தரப்பிரதேசத்துக்கு சென்றார் என்ற கேள்வி எழுந்தது. ஒருவேளை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த நிகழ்வை உத்தரப் பிரதேசத்தில் நடந்தது என்று தவறாக குறிப்பிடுகிறார்களா என்ற சந்தேகம் வந்தது. ஆனால், இவர் இருந்ததே குவாலியர்.

இருப்பினும், இவருக்கும் இந்தூர் சம்பவத்துக்கும் தொடர்பு உள்ளதா என்று ஆய்வு செய்தோம். இந்தூர் சம்பவம் ஏப்ரல் 2ம் தேதி ஊடகங்களில் பதிவாகியுள்ளது. ஆனால், வந்தனா மார்ச் 31ம் தேதியே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. 

maalaimalar.comArchived Link

தொடர்ந்து தேடிய போது உத்தரப்பிரதேச போலீசார் வெளியிட்ட ட்வீட் பதிவு ஒன்று கிடைத்தது. அதில், உத்தரப் பிரதேசத்தில் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை. இது மத்தியப்பிரதேசத்துடன் தொடர்புடையது என்று போபால் சமாச்சார செய்தி இணைப்பைக் கொடுத்திருந்தனர். 

Archived Link

மேலும், மூளை ரத்தக் கசிவால் வந்தனா திவாரி மரணம் அடைந்தார் என்று மத்தியப் பிரதேச மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட பதிவும் கிடைத்தது.

Archived Link

இந்த ஆதாரங்கள் அடிப்படையில், உத்தரப்பிரதேசத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் தாக்கியதால் உயிரிழந்த டாக்டர் வந்தனா திவாரி என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Avatar

Title:குறிப்பிட்ட சமுதாயத்தினர் தாக்கியதில் உ.பி டாக்டர் வந்தனா திவாரி மரணம் அடைந்தாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False