
கரூர் தவெக பிரசார கூட்டத்தில் விபத்தைத் தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இரண்டு நியூஸ்கார்டுகளை வைத்து ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. முதல் நியூஸ் கார்டில், “மின்சாரம் துண்டிக்கப்படவில்லை” என்று செந்தில் பாலாஜி கூறியது குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாவது நியூஸ் கார்டில், “விபத்தை தவிர்க்கவே மின்சாரம் துண்டிப்பு. கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் அறைக்குள் நுழைந்தனர், தகரக்கொட்டகையை அகற்றி வெளியேற முயன்றனர். இதன் காரணமாக அசம்பாவிதத்தைத் தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்று மின்சார அதிகாரி முதல் செந்தில் பாலாஜி வரை உருட்டு. விபத்தை தவிர்க்கவே மின்சாரம் துண்டிப்பு என்று இன்னொரு உருட்டு. எத்தனை பித்தலாட்டம் ?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கரூரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த கூட்ட நெரிசலுக்கு தி.மு.க மற்றும் தமிழ்நாடு அரசு தான் காரணம் என்று தவெக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. கூட்டம் நடந்தபோது அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டதே நெரிசல் ஏற்படக் காரணம் என்று ஒரு காரணத்தை தவெக தரப்பில் கூறியிருந்தனர்.
ஆனால், அந்த பகுதியில் மின்சார வாரியம் மின்சாரத்தைத் துண்டிக்கவில்லை என்று ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது. தவெக ஏற்பாடு செய்திருந்த ஜெனரேட்டர் நிறுத்தப்பட்டதால், அதிலிருந்து பெற்ற மின்சாரம் மட்டுமே தடைபட்டது என்பதை வீடியோ மூலம் மின்சார வாரியம் விளக்கியது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று (அக்டோபர் 15, 2025) அன்று சட்டப்பேரவையில் சம்பவம் தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மின்சாரம் நிறுத்தப்பட்டதை ஒப்புக்கொண்டார் என்பது போன்று நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஊடகம் ஒன்று அந்த நியூஸ் கார்டை வெளியிட்டுவிட்டு, எதிர்ப்பு எழவே அகற்றியிருப்பது தெரியவந்தது. ஆனால், அந்த நியூஸ் கார்டை எடுத்து மற்றவர்கள் வதந்தி பரப்பி வருவதை காண முடிகிறது.
எனவே, உண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன பேசினார் என்பதை அறிய ஆய்வு செய்தோம். தமிழ்நாடு சட்டப்பேரவை நிகழ்வுகள் யூடியூபில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அக்டோபர் 15, 2025 சட்டப்பேரவை நேரடி ஒளிபரப்பு நிகழ்வை பார்த்தோம். வீடியோவின் 1:51:42வது மணி நேரத்தில் ஜெனரேட்டர் கொட்டகைக்குள் கூட்டம் கூடியதைப் பற்றி ஸ்டாலின் பேசுகிறார். அப்போது, “கூட்டத்தில் ஒரு பகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து தகரக்கொட்டகையை அகற்றியும் வெளியேற முயற்சி செய்திருக்கின்றனர். இதனால், மின்சாரம் தாக்குவதைத் தடுக்க ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார்” என்று கூறுகிறார். எந்த இடத்திலும் தமிழ்நாடு மின்சார வாரியம் அந்த பகுதியில் மின்சாரத்தை நிறுத்தியது என்று கூறவில்லை.
உண்மை இப்படி இருக்க, ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார் என்றதை மாற்றி, “விபத்தை தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது” தவறான செய்தியை ஊடகம் வெளியிட்டுள்ளது என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தை துண்டித்திருக்கிறார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதை திரித்து “கரூரில் விபத்தை தவிர்க்க மின்சாரம் துண்டிக்கப்பட்டது” என்று மு.க.ஸ்டாலின் கூறியதாக தவறான செய்தியை பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram

Title:கரூரில் விபத்தைத் தவிர்க்கவே மின்சாரம் துண்டிக்கப்பட்டது என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
Fact Check By: Chendur PandianResult: False
