கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சம் நவம்பரில் நிகழுமா?- ஐசிஎம்ஆர் மறுப்பு
‘’நவம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சம் தொடும்,’’ என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளதாக, ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பகிரப்படுகிறது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
இதில் புதிய தலைமுறை டிவியில் வெளியான செய்தி வீடியோ ஒன்றை இணைத்துள்ளனர். அந்த செய்தியில், ‘’கொரோனா வைரஸ் தாக்கம் உச்சம் தொடுவது இந்தியாவில் தற்போது 34 நாட்களில் இருந்து 74 நாட்களாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாதத்தில் இந்திய அளவில் கொரோனா தாக்கம் உச்சம் பெறும் என்று ஐசிஎம்ஆர் கூறியுள்ளது,’’ எனக் குறிப்பிடுகின்றனர்.
இதனை பலரும் உண்மை என நம்பி வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட செய்தியை புதிய தலைமுறை ஊடகம் முதலில் வெளியிட்டிருந்தது உண்மைதான். அதன் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
ஆனால், இந்த செய்தி வெளியான சில மணிநேரத்திலேயே இதுபற்றி ஐசிஎம்ஆர் (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) மறுப்பு தெரிவிக்கவே, உடனடியாக, புதிய தலைமுறையும் செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தியின் லிங்க் கீழே தரப்பட்டுள்ளது.
இதன்படி, புதிய தலைமுறை ஊடகம் இதுபற்றி ஃபாலோ அப் செய்தி வெளியிட்டிருந்தாலும், அதனை கவனிக்காமல் முதலில் வெளியிட்ட செய்தியையே பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஃபேஸ்புக் பதிவும்.
இதேபோன்ற குழப்பமான செய்தியை நியூஸ்7 தமிழ் ஊடகமும் வெளியிட்டிருக்கிறது.
புதிய தலைமுறை, நியூஸ்7 தமிழ் மட்டுமின்றி பல்வேறு ஊடகங்களும் இந்த செய்தியை வெளியிட்டிருக்கின்றன. ஆனால், மிகவும் வைரலாக பரவியதால், ஐசிஎம்ஆர் இதுபற்றி மறுப்பு தெரிவித்துள்ளது.
இதையேற்று நிறைய ஊடகங்கள் தமது செய்தியில் திருத்தம் செய்துவிட்டன. ஆனால், புதிய தலைமுறை தனது செய்தியை திருத்திக் கொள்ளாமல்/ நீக்காமல் அப்படியே சுற்றில் விட்டுவிட்டு தனியாக மற்றொரு ஃபாலோ அப் செய்திருக்கிறது. இதனால், பழைய வீடியோ செய்தியை பலர் உண்மை என நம்பி பகிர்கின்றனர். இதேபோல, நியூஸ் 7 தமிழ் ஊடகமும் செய்தியில் திருத்தம் செய்யவில்லை.
இதுவரை நமக்கு கிடைத்த ஆதாரங்களின்படி தெரியவந்த உண்மையின் விவரம்,
1) தமது பெயரில் பரவிய ஆய்வுக் கட்டுரை பொதுமக்களை குழப்பக்கூடியதாக உள்ளதென்று, என ஐசிஎம்ஆர் மறுப்பு வெளியிட்டுள்ளது.
2) ஐசிஎம்ஆர் நிறுவிய ஆபரேஷன்ஸ் ரிசெர்ச் குரூப் தரப்பில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒன்று சேர்ந்து, குறிப்பிட்ட ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கின்றனர். எனினும், இதனை ஐசிஎம்ஆர் அதிகாரப்பூர்வமாக தமது பெயரில் வெளியிடவில்லை.
3) புதிய தலைமுறை, நியூஸ்7 தமிழ் போன்ற ஊடகங்கள் இதனை ஐசிஎம்ஆர் பெயரில் வெளியான ஆய்வறிக்கை எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதால் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பொதுமக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
4) தவறான தகவலுடன் முதலில் வெளியிட்ட செய்தியை நீக்காமலேயே அதற்கு ஃபாலோ அப் செய்தியை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது. ஆனால், முதலில் வெளியான அந்த செய்தியை இன்னமும் பலர் ஷேர் செய்கின்றனர். இதேபோல, நியூஸ் 7 தமிழ் ஊடகமும் திருத்தம் ஏதும் செய்யாமல் தவறான தகவலுடன் அப்படியே செய்தியை வெளியிட்டிருக்கிறது.
5) ஜூன் 15ம் தேதி ஐசிஎம்ஆர் மறுப்பு தெரிவித்த நிலையில், அதே நாளில்தான் புதிய தலைமுறையும், நியூஸ்7 தமிழ் ஊடகமும் இந்த செய்தியை பகிர்ந்திருக்கின்றன.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி மேற்கண்ட செய்திகளில் முழு உண்மை இல்லை என தெரியவருகிறது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:கொரோனா வைரஸ் பாதிப்பின் உச்சம் நவம்பரில் நிகழுமா?- ஐசிஎம்ஆர் மறுப்பு
Fact Check By: Pankaj IyerResult: Partly False